பக்கம்:மறைமலையம் 1.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖
217

பரவுந் தேம்பொருள் குறைந்து, நச்சுக் காற்று எங்கும் மிகுதலின் அக் காலத்தே நீராடிவருவது உடம்பிற்குத் தீமையைத் தரும் பகற்பொழுதில் தேம் பொருள் பரவுதலும் இராப் பொழுதில் நச்சுக்காற்றுப் பரவுதலும் யாங்ஙனமெனிற் காட்டுவாம்: பகல் இரவு என்னும் இரு பொழுதுகளிலும் மக்களும் விலங்கு களுமெல்லாம் உயிர்க் காற்றை உள்ளிழுத்து நச்சுக்காற்றை வெளிவிடுகின்றன ரென்றும்,பகற்காலத்தே மட்டும் இவ்வுயிர்கள் வெளிவிடும் நச்சுக்காற்றை மரஞ் செடிகொடிகள் உள்ளிழுத்துத் தூய உயிர்க்காற்றை வெளியே கக்குகின்றன வென்றும், இராக்காலத்திலோ மரஞ் செடி கொடிகளுங்கூட மற்ற உயிர்களைப் போலவே உயிர்க்காற்றை உள்ளிழுத்து நச்சுக் காற்றைப் புறத்தே விடுகின்றனவென்றும் இந்நூலின் இரண்டாம் இயலில் உயிர்க்காற்றைப் பற்றிப் பேசியபோது நன்கெடுத்து விளக்கி யிருக்கின்றேம். பகலிற் கதிரவன் ஒளியின் உதவியால் நம்மை நாற்புறத்துஞ் சூழ்ந்துள்ள காற்றானது அடிக்கடி தூய்தாக்கப்படுகின்றது. மூச்சின் வாயிலாக நாம் புறத்தே போக்கும் நச்சுக்காற்று அத்தனையும் மரஞ் செடி கொடிகளால் உள்விழுங்கப் படவும், அதனை விழுங்கிய அவை திரும்ப உயிர்க் காற்றைத் தந்து விலங்கு களையும் மக்களையும் பாதுகாக்கவும் புரிந்துவரும் ஞாயிற்றின் ஒளி மறைந்த பிறகு,புல் மரஞ்செடி கொடிகள் முதல் மக்கள் ஈறான எல்லா உயிர்களும் நச்சுக்காற்றையே வெளிப்படுத்திச் சூழவுள்ள வெளியை யெல்லாம் நஞ்சாக்கி விடுகின்றன. உயிர்க்காற்று நுட்பமான பொருளாகையால் அது மேலே இயங்கும்; நச்சுக்காற்றுத் தடிப்பான பொருளாகையால் அது கீழேதான் இயங்கும் இந் நச்சுக்காற்று இராப் பொழுதில் மிகுதிப்படுதலால் இது கீழுள்ள நீரிற் கலந்து அதனை நஞ்சாக்குகின்றது. ஞாயிற்றி னொளி யில்லாமை யால் இவ்வாறு இரவில் நஞ்சாய்ப்போன நீரிற் குளிப்பதும் முழங்குவதுஞ் சிறிதும் உடம்பிற்கு ஆகாவென்று கடைப்பிடிக்க, இது மட்டுமேயன்றி, இராக்காலத்தில் நாம் உள்ளிழுக்கும் மூச்சில் நச்சுக்காற்றுக் கலந்திருப்பதால், அப்போது நமதுடம்பும் வலிகுறைந்த நிலையில் இருக்கின்றது. வலிகுன்றியுள்ள அப்பொழுதில் நஞ்சான நீரிற் குளிப்பது எவ்வளவு தீதாம் என்பதனை நாம் மீண்டுஞ் சொல்லுதல் வேண்டுமோ? இதுவேயுமன்றி, இராக்காலத்திற் பாம்பு தேள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/250&oldid=1597736" இலிருந்து மீள்விக்கப்பட்டது