❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖ |
பகுதிகளிலும் உள்ள இரத்தங் குறைந்து நிற்குமாதலால்,அப்பொழுது நீராடவே உள்ளே சுவறும் நீர் உடனே வெளிப்படுதற்கு வழியின்றி உள்ளிருந்தே நீர்க்கோவையினை வருவிக்கும் என்க.ஆதலால், உண்ட வுடனே நீரில் முழுகுதல் ஆகாது. உண்டவுணவு நன்றாய்ச் செரித்துப்போன பிறகு நீராடினால், அஃது உடம்புக்கு நன்மையைத் தரும். உணவுண்டு அது செரிக்கு மளவுங் காத்திருந்து உச்சிப்பொழுதிலேனும் மாலைக் காலத்தி லேனுந் தலைமுழுகுதலைக் காட்டிலும் விடியற் காலையில் வெறு வயிற்றோடு நீராடுதலே நிரம்பவுஞ் சிறந்த முறையாகும். நீராடியபின் இரத்தமானது உடம்பெங்கும் ஒக்கப்பரவி ஓடுதலால்,அடியிலும் மூளையிலும் மிகுந்திருந்த சூடு அதனோடு உடன் பரவிக் கழிந்துபோகும்; தீனிப்பையிலும் முதல்நாள் உண்டது முழுதுமற்றுப் பசிமிகுந்தெழும்.
இனிக் களைத்திருக்கும் பொழுதும் எவரும் நீராடுதல் ஆகாது. பெண் மக்கள் வீட்டுக்கு விலக்கமான முதலிரண்டு நாட்களுந் தலைமுழுகல் கூடாது; சூல்கொண்ட மாதரார் அடுத்தடுத்து நீராடுதலைத் தவிர்த்தல் வேண்டும். களைப் புற்றவர் களைப்புத் தீர்ந்த பிறகும், விலக்கமான பெண்கள் மூன்றா நாளுஞ், சூல்கொண்ட மங்கையர் கிழமைக்கு மூன்றல்லது நான்கு முறையும் தத்தம் உடம்பின் கூறு பாடறிந்து நீராடக் கடவர். ஏனென்றால்,இம் மூவருக்கும் இரத்த ஓட்டம் உடம்பெங்கும் ஓர் ஒழுங்காய்ப் பரவாமல் ஓரிடத்திற் குறைந்தும் ஓர் இடத்தில் மிகுந்தும் இருத்தலால்,இவர்கள் அங்ஙனம் இரத்தம் ஏற்றக் குறைச்சலா யிருக்கும் பொழுது கண்டபடி நீராடுவராயின் அதனால் நோய்கொண்டு வருந்துவர். அது நிற்க.
இனிக் குளித்தற்கேற்ற நீரின் வகைகளைப் பற்றிச் சிறிது கூறுவாம்; துப்புரவான நீர் மழைத் தண்ணீரே யாகுமாறும்.நிலத்திலுள்ள நீர்நிலைகள் பலவும் அவற்றைச் சூழ மக்களும் பிற உயிர்களுஞ் சேர்த்து வைக்கும் அழுக்குகளாலும் நச்சுப்பொருள்களாலும் நஞ்சாய்ப் போகுமாறும் எட்டாம் இயலில் நீர் நிலைகளைப்பற்றிக் கூறியவழி இனிது விளக்கினாம். அவ்வாற்றால்,மழைத்தண்ணீரில் முழுகுதலே மிகச் சிறந்ததென்பது நன் நன்கு புலப்படும்.ஆனாலும்