பக்கம்:மறைமலையம் 1.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
222

❖ மறைமலையம் 1 ❖

ஒவ்வொருவரும் முழுகுதற்குப் பயன்படும் அளவு எப்போதும் மழைத் தண்ணீர் கிடைத்தல் அரிதாகையாற்,கிணறு குளம் ஏரி கால்வாய் ஆறு முதலான நீர்நிலைகளைத் தூய்மையாக வைத்துப் புழங்கி ருதல் ஆறறிவுடைய மக்களுக்கு இன்றியமையாத கடமையாமென்க. ஓடுநீருள்ள கால்வாய்கள் ஆறுகளைவிட நிற்குநீருள்ள கிணறு குளம் ஏரிகளை நிரம்பவுந் துப்புரவாக வைத்துக் கொள்ளல் வேண்டும். ஊருக்கு நடுவிலேனும் பக்கங்களிலேனும் உள்ள நீர்நிலைகளும், மலைச்சுனைகளும், நீர்வீழ்ச்சிகளுமே தூய நீர் உடையன வாயிருத்தலால் அவைகளே நீராடுதற்கு மிக இசைந்தன ஆகும். மலைமேலிருந்து ஓடிவரும் அருவி நீரிற்குளிப்பது உடம்பிற்கு அளவிறந்த நன்மையைத் தரும். ஏனென்றாற் பொன் வெள்ளி, செம்பு, இரும்பு முதலான கருப்பொருள்களுஞ் சிவப்பு நீலம் பச்சை முதலான மணிகளும் மலைமேலும் மலைமுழஞ்சு களிலும் நெடுகச் சிதர்ந்து கிடத்தலால் அவற்றின் மேலோடுந் தெளிநீர் அவ்வரும் பொருள்களிலுள்ள உயர்ந்த மின்பிழி வொடு கலந்து வருகின்றது;அதனால்,அவ்வருவி நீரில் தலை முழுகுவோர்க்கு அம் மின்பிழிவு உடம்பிற் பாயுமாதலால் அவர் மிக மேலான நன்மையைப் பெறுவர்,நோயாளிகள் நோய்தீர்ந்து களிப்பர்.

பொதுவாக விரைந்தோடுந் தண்ணீரிலெல்லாம் மின் பிழிவு மிகுந்திருக்கின்றது.உலகத்திற் காணப்படும் இயக்கங்களெல்லாம் மின்பிழிவின் இயக்கத்தால் உண்டாவனவாகும்.நமது உயிர்வாழ்க்கையும், நமது உயிர் வாழ்க்கைக்கு இடமான இந்நிலவுலக இயக்கமும், இந்நிலத்தைச் சூழ்ந்தோடும் நிலா மண்டில ஓட்டமுந்,தன்னைச் சுற்றிச் சுழலும் நிலமண்டில முதலான உலகங்களைத் தன்னுடன் இழுத்துக் கொண்டு தான் மற்றொரு ஞாயிற்றினை வட்டமிட்டு உருளும் நமது ஞாயிற்றின் நடையுமாகிய எல்லா இயக்கங்களும் விந்து என்று அறிவு நூல்களிற் சொல்லப்படும் இம் மின்னொளியின் இயக்கத்தால் நடைபெற்று வருகின்றன.எங்கெங்கு அசைவு காணப்படுகின்றதோ அங்கெல்லாம் அவ்வசைவினைத் தோற்றுவிக்கும் மின்னின் இயக்கமும் உண்டென்று துணிந்துகொள்க. மின்னின் இயக்கம் முனைந்து நடவாத இடங்களில் எவ்வகையான அசைவுங் காணப்படுவதில்லை; நமதுடம்பின் அகத்தே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/255&oldid=1584102" இலிருந்து மீள்விக்கப்பட்டது