❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖ |
உயிரொடு கூடி நடக்கும் இம்மின்னின் அசைவு ஓய்ந்து போனவுடன், உயிர் உடம்பைவிட்டுப் பிரிந்து போகின்றது. இவ்வாறு உடம்புகளிலும் உலகங்களிலும் உலகத்துப் பொருள்களிலும் நடைபெறும் இயக்கங்களுக்கெல்லாம் ஏதுவாவது அவற்றுட் கலந்து நின்று அவற்றை இயக்கும் மின்னின் அசைவேயாதலால், ஓடுநீரின்கண் மின்னின் கலப்பு மிகுதியும் உண்டென்று உணர்ந்துகொள்க. இந்த ஏதுவினால் ஓடுநீருள்ள மலையருவிகளிலுங், கால்வாய்களிலும், ஆறுகளிலுங், கடலிலுங் தலை முழுகுதல் நிரம்பச் சிறந்ததாகும். ஓட்டம் இல்லாது கட்டுக்கிடையாய் நிற்குந் தண்ணீர் உள்ள கிணறு, சுனை, மடு முதலியவற்றில் முழுகுதல் அத்துணை நல்லதன்று.
இனிக், கடல்நீர் ஓட்டம் இல்லாததாகலின் அதில் முழுகுதலைச் சிறப்பித்துக் கூறியதேன் என்றால்; கடல்நீர் பெருங்காற்றினால் அலைக்கப்பட்டு மிக்க விசையோடும் உலவுதலின் அதன்கண் மின்பிழிவு நிரம்ப வுண்டென்று அறிதல் வேண்டும்; அதுவேயுமன்றிக், கடலின்கட் பெரிய பெரிய நீரோட்டங்களும் ஆறுகளும் இடையறாது செல்கின்றன வென்று இக்காலத்து நில இயற்கை நூல் வல்லார்' (Physical Geography) நன்கு ஆராய்ந்து கூறுதலின், அதனை யறியாமற் கடல்நீர் ஓட்டமில்லாத தென்று சொல்லுதல் பொருந்தாது. மேலுங், கடல்நீரிலுள்ள உப்பும் உப்பங் காற்றும் உடம்பிலுள்ள சொறிசிரங்கு நமைச்சல் முதலான தோலைப் பற்றிய நோய்களையும் போக்குகின்றது. ஆனாற் கடற்கரையிலுள்ள பட்டினங்களின் சாக்கடைத் தண்ணீரும் மலக்குப்பையுங் கடல்நீரிற் கலப்பதொடு, பொலுபொலுப்பான மணல் நிறைந்த கடற்கீழ் நிலத்திலுஞ் சுவறி அக் கரையை அடுத்துள்ள நகரக் கிணறுகள் குளங்கள் முதலியவற்றின் தண்ணீரையுங் கெடுத்துவிடுகின்றன. நிலத்திற் சுவறுஞ் சாக்கடைத் தண்ணீர் அதன் அடிப்படையில் ஓடும் நீரோட்டங்களைக் கெடுத்து நஞ்சாக்கும் வகையைப்பற்றி மேல் இயல்களில் விரிவாகப் பேசியிருக்கின்றோம். இவ்வாறு பட்டினங்களை அடுத்துள்ள கடல்நீர் அவற்றின் சாக்கடை நீரால் மலினம் எய்திக் குளித்தற்கு ஆகாததாய் மாறுதலின் பட்டினக்கரை மருங்கிலுள்ள கடல்நீரிற் குளித்தல்