பக்கம்:மறைமலையம் 1.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
224

❖ மறைமலையம் 1 ❖

 நலமுடையதன்று. ஊர் அடுத்திராக கரைப்பக்கங்களிற் கடல்நீராடுதலே நிரம்பவும் பயன்றருவதாம் என்க.

இனி ஆழ்ந்த கிணற்றுநீர் குளநீரிற் றலைமுழுகுதலைப்பார்க்கிலும், மேல் நீர் மிகுந்துள்ள கடல் ஏரி யாறுகளிற் குளித்தலே பெரிதும் நலந்தருவதாம். ஆழ்ந்த நீர்நிலைகளின் தண்ணீர் சுற்றிலுமுள்ள மலக்கழிவுகள் சுவறிய நீரோட்டங்களோடு கலந்து நஞ்சாய்போவதற்கு இடமுண்டாதலினாலும், அவற்றின்கட் கதிரவன் ஒளி மிகுதியாய்ப்படுவதற்கு வழி இன்மையினாலுங், கீழுள்ள நச்சுக் காற்றோடு கலத்தலானும், அவை உடம்பின் நலத்திற்கு இசைவதாகா. மற்றுக் கடல் ஏரியாறு முதலியவற்றின் நீர் நிலத்தின்மேல் நிற்றலானும், ஞாயிற்றின் ஒளியும் வெப்பமும் படுதலால் மிகவுந் தூயதாயிருத்தலானும், மேலே உலவுந் தூயகாற்றோடு விரவுதலானும் இவையே உடம்பைப் பாதுகாத்தற்கு நிரம்பவும் ஏற்றதாம் என்க. அங்ஙனமாயின், கடலும் ஏரியும், யாறும் இல்லாத நகரங்களில் வாழும் மாந்தர்கள் ஆழ்ந்த கிணறு குளம் முதலியவற்றின் நீரை யன்றி வேற்றுநீரைப் புழங்கல் ஏலாமையின், அவர் தமது உடம்பின் நலத்தைப் பாதுகாக்கும் வகைதான் யாங்ஙன மெனின், மலநீர்க் கழிவுகளுஞ் சாக்கடைத் தண்ணீரும் நிலத்திற் சுவறாதபடி நிலத்திற் சுண்ணமுங் கல்லும் இட்டு உறுதியாகக் கட்டி மேலேயும் வழுவழுப்பாக நீறு தீற்றி, அவ் அழுக்கு நீரையெல்லாம் அந் நகரங்களுக்கு எட்டாத் தொலைவிற் போக்கி அகற்றல் வேண்டும். அதனொடு நகரத்திலுள்ள கிணறுகள் குளங்களின் சுற்றுச் சுவர்களுக்கு அடிவரையில் அழுத்தமான சுண்ணம் தீற்றி வைத்து, ஞாயிற்றினொளியுந் தூயகாற்றும் அவற்றின் நீர்மேல் நன்றாகப் படும்படி ஒழுங்கு செய்து வைத்தல் வேண்டும். சில நகரங்களில், தலைமை செலுத்துவோர்கள் கிணறுகளிற் கதிரவ னொளியுந் தூய காற்றும் படாதபடி மேலே பலகைகள் இட்டு நன்றாய் இறுக்கி விடுவதைப் பார்த்து யாம் நிரம்ப வியப்புற்றோம். வெயிலும் நல்ல காற்றும் படாதபடி வைத்து அக் கிணற்று நீரைப் புழங்க வேண்டுமெனக் கற்பிக்கும் அவருரை இயற்கைக்கும் நூலுணர்ச்சிக்குஞ் சிறிதும் பொருந்தாததாய் இருக்கின்றது. நகரமாந்தர் வெளிவிடும் நச்சுக்காற்றும் நோயை உண்டாக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/257&oldid=1584105" இலிருந்து மீள்விக்கப்பட்டது