பக்கம்:மறைமலையம் 1.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖
225

 நச்சுப்புழுக்களுங் கிணற்றினுட் செல்லாமைப் பொருட்டு, அங்ஙனங் கிணறுகளை நன்றாய் இறுக மூடி வைக்கின்றோமென்று அவர்கள் உரைப்பார்களாயின், இச்செயல் கொசுவின் கடிக்கு அஞ்சிப் புலிவாயில் அகப்பட்டதனையே ஒத்திருக்கின்றது. நகரமாந்தர்கள் விடும் நச்சுக் காற்றும் நோய்ப் புழுக்களுங் கிணறுகளினுட் செல்லுமாயின், அவற்றை அகற்றுவதற்குத் தூய காற்றும் வெயில் வெளிச்சமும் அக் கிணறுகளினுட் செல்லுமாறு செய்தலே சிறந்த முறையாகும். ஞாயிற்றினொளி கொறுக்குப் புண் முதலான கொடிய நோய்களையெல்லாம் நீக்கி உடம்பைத் தூய்தாக்கும் இயல்பையும், அதனால் உலகத்தின்கண் உள்ள எல்லாப் பொருள்களுந் தூயவாகி நடைபெறுதலையும் மேலே நன்கு விளக்கியிருக்கின்றோம். உயிர்க் காற்றினால் நீரும் உயிருந் துப்புரவாய் நிற்றலும் மேலியல்களில் இனிது விளக்கப்பட்டது. இத்துணைச் சிறந்த இவ்விரண்டுங் கிணறுகளினூடு செல்லாமல், அவற்றை இறுக்கமாக மூடிவைத்தலைக் காட்டினும் பெருந்தீங்கு பிறிதுண்டோ? இங்ஙனஞ் செய்தலாற் கிணறுகளின் அடியிலுள்ள நீர் அடியே தங்கும் பருப்பொருளான நச்சுக்காற்றோடு கலந்து நஞ்சாய்ப் போவதுடன், வெயில் வெளிச்சம் படாமையால் தானே பலவகை நச்சுப்புழுக்களைத் தோற்றுவித்து மக்களுயிரைக் கொள்ளை கொண்டு போவதுந் திண்ணம். இன்னும், மக்கள் வெளியே உலவிடின் நோய்ப் புழுக்களால் தாக்கப்பட்டு இறப்பரென நினைந்து, அவரை வெயில் வெளிச்சமுங் காற்றுமில்லாத அறைகளின் உள்ளிட்டுப் பூட்டிவைக்கும் அறியாமைச் செயலுக்கும் இதற்குஞ் சிறிதேனும் வேறுபாடு காண்கின்றிலேம். இப்பொல்லாங்கினை நன்குணர்ந்தவர்கள் கிணற்றுத் தண்ணீரைப் பாதுகாப்பதற்குத் தூய காற்றும் வெயில் வெளிச்சமும் படுதற்கு வேண்டும் இசைவுகளையும் பிற ஒழுங்குகளையுஞ் செய்தல் வேண்டுமல்லாற் கிணறுகளை மூடிவைத்தல்கூடாது. இத்தகைய ஏற்பாடுகளெல்லாங் குறைவறச் செய்து கொண்டால், நகர மாந்தர்கள் கிணற்றுநீர் குளத்துநீரைப் புழங்குதற்குச் சிறிதும் அஞ்ச வேண்டுவதில்லை என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/258&oldid=1597762" இலிருந்து மீள்விக்கப்பட்டது