பக்கம்:மறைமலையம் 1.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226



11. நிலம்


இனி, இவ்வியலில் மக்களுயிர் வாழ்க்கைக்கு நிலத்தினால் உண்டாகும் பயன்களைப்பற்றிப் பேசுவாம்: நமது உடம்பின் அமைப்பிற் காற்றுக்கும் நீருக்கும் உரிய பகுதிகள் போக எஞ்சிய அனையவும் நிலத்திற்கே உரியனவாகும். யாங்ஙனமெனிற், கரி, வெடியுப்பு, எரிகந்தகம், கந்தகம், தீக்கல், உப்பு, சாம்பருப்பு, உவர்மண், சுண்ணம், காந்தம், இரும்பு, இருப்புநிறச்செம்பு, ஈயம் முதலியவற்றின் நுண்பொருள்களால் நமதுடம்பு ஆக்கப்பட்டிருத்தலாலும், இப்பொருள்களால் நமதுடம்பு ஆக்கப்பட்டிருத்தலாலும், இப்பொருள்கள் அவ்வளவும் நிலத்திற்கே உரியனவாயிருத்தலாலும் என்க. தாய் தந்தையரின் கருநீரில் மிகவும் நுண்ணிய வாய் அமைந்த இப் பொருள்களெல்லாம் பின்னர்க் கருவளருந்தோறும் உணவின் பிழிவொடு சேர்ந்து அதனைப் பெருக்கச்செய்து வருகின்றன; அதன்பின்னர் அக்கருமுற்றி மகவாய்ப் பிறந்து வளருந்தோறுந் தாய்ப்பால் ஆன்பாலின் வாயிலாகவும், அது பிள்ளைப்பருவம் அடைந்த போது உண்ணும் பலதிறப்பட்ட உணவின் வாயிலாகவும் உடம்பிற் சேர்ந்து அதனை உரப்படுத்தி வரவர அதனைப் பெரிதாக்கி வளர்த்து வருகின்றன. நமதுயிர்க்கு இருப்பிடமான இவ்வுடம்பை இங்ஙனம் வலிவேற்றி வளர்த்துவருந் தாயானவள் இந்த நிலமகளேயாய் விளங்குகிறாள். இங்ஙனம் நமதுடம்பின் அமைப்பிற்கும் அதன் வளர்ச்சிக்கும் இன்றியமை யாது வேண்டப்படுங் கருப்பொருள்களை உதவுதல் மட்டுமேயன்றி, நம்முடம்புகள் இருத்தற்கும் உலவுதற்கும் இதுவே பயன்பட்டு வருகின்றது.

இன்னும் நமதுடம்புக்கு வேண்டிய இன்றியமையாப் பொருளான தண்ணீருங்கூட நிலத்தின் உதவியினாற்றான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/259&oldid=1584119" இலிருந்து மீள்விக்கப்பட்டது