❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖ |
நமக்கு எளிதிற் கிடைத்துப் பயன்படுகின்றது. அஃது எப்படியென்றால், ஞாயிற்றின் வெப்பத்தால் ஆவிவடிவாய் மேலே இயங்கும் நீர் குளிர்ங்காற்றால் இறுகியவுடன் நிலத்தின் ஆற்றலாற் கீழ் இழுக்கப்பட்டு மழையாய் இறங்குகின்றது. இறங்கிய நீர் நிலத்தின்மேல் ஏரி ஆறு கால்களாகவும், நிலத்தின்கீழ்க் கிணறு கூவல் குளம் முதலியனவாகவும் இருந்து எல்லா உயிர்களாலும் புழங்கப்பட்டு வருகின்றது. நிலத்திலுள்ள நீர் அந் நிலத்தின் கருப்பொருள்களொடு கலந்து நமதுடம்பினுட் செல்லுத லாற்றான், அஃது அதற்கு வேண்டும் வலியபொருள்களை ஊட்டி அதனை வலுப்படுத்தி வளர்த்து வருகின்றது. நல்லது, இந்நிலத்தின் கருப்பொருள்கள் சிற்சிலகால் நமதுடம்பில் ஏறினாற் போதாவோ, அவை அடுத் தடுத்து ஊட்டப்பட வேண்டுவது ஏதுக்கெனில்; அவ்வியல் பினையுஞ் சிறிது விளக்குவாம்:
நமதுடல் எண்ணிறந்தகோடி உயிர்த்துகள்களால்[1] (cells) அமைக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வோர் உயிர்த்துகளும் மிகச் சிறியதோர் உடம்பும் அதனுள் ஓருயிரும் பொருந்தப் பெற்றனவாகும். பலகோடி குடிமக்களையுந் தன்னுள் அடக்கி வைத்து ஆளும் ஒரு மன்னவன்போல, எண்ணிறந்த கோடி உயிர்த்துகள்களையுந் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு ஒவ்வொரு மக்கள் யாக்கையிலும் ஒவ்வோருயிர் தன்னரசு நடத்தி வருகின்றது. ஓர் அரசன் கீழிருந்து வாழுங் குடிமக்களிற் பலர் காலந்தோறும் மடிந்துபோக, வேறுபலர் அடுத்தடுத்துத் தோன்றுதல்போல நம்முடம்பின் கண்ணும் பழைய உயிர்த்துகள்கள் ஒவ்வோர் இமைப்பொழுதும் வெளியே கழிந்து போக வேறு பல புதிய உயிர்த்துகள்கள் ஒவ்வொரு நொடியுந் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. பழையன கழிதலும் புதியன புகுதலுமாகிய இம் மாறுதல்கள் நம்முடம்பின் மட்டுமேயன்றி, உலகம் எங்கணும் உள்ள எல்லாப் பொருள்களிலும் இடைவிடாது நிகழ்ந்து கொண்டே வருகின்றன. பழைய மரஞ் செடி கொடிகள் மடித்து மண்ணாகிப் புதிய மரஞ் செடி கொடிகள் தோன்றுதற்கு உதவியாய் அவற்றிற்கு உணவாதலும், புதியனவும் நாடோறும் வளர்ந்து முற்றி அழிந்து தமக்குப் பின் வருவனவற்றிற்கு உதவியாதலும் நங் கண்முன்னே இடையறாது நிகழ்கின்றன வல்லவோ? இங்ஙனம் ஒரு
- ↑ 1