❖ மறைமலையம் 1 ❖ |
தொடர்பாக மாறுதல் நிகழுதலாற்றான், ஒவ்வோர் உடம்பிலும் உயிர்வாழ்க்கை இனிது நடைபெறுகின்றது; இம் மாறுதல் நிகழாவிட்டால் உயிர் உடம்பை விட்டுப் பிரிந்து போகும் உயிரோடிருக்கும் நம்மனோர் உடம்புகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நொடியும் இவ்வுயிர்த் துகளின் மாறுதல் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றது. பழைய உயிர்த்துகள்கள் தாம் பயன்பட்டவுடன் புறம்பே கழிந்து போகப் புதிய உயிர்த்துகள்கள் உடனுக்குடன் வந்து சேர்கின்றன. இவ்வாறு ஓயாது நடந்துவரும் மாறுதலை நாம் எண்ணிப் பார்க்குங்கால் ஓர் இமைப்பொழுதிற்கு முன்னிருந்த நமதுடம்புவேறு, அதன் பின்னிருக்கும் நமது உடம்பு வேறு என்பது நன்கு புலனாமென்க. உடம்பு நூல் வல்லார், ஒருவன் உடம்பு ஏழு ஆண்டுகளில் முற்றும் புதிய தாக மாறுகின்றதென்று கணக்கிட்டிருக்கின்றார்கள். இவ்வுண்மைகளையெல்லாம் உற்று நோக்குங் கால், ஒவ்வொரு நொடியும் நமதுடம்பினின்று கழியும் பழைய உயிர்த் துகள்களும் மாற்றாகப் புதிய உயிர்த்துகள்கள் வந்து சேர்கின்றனவென்றும், இப் புதியவை அவ்வளவும் இரத்தம், உணவு, உணவிற் சேர்ந்த நிலத்தின் கருப்பொருள்கள் என்னும் இவற்றின் வாயிலாகக் கொண்டுவந்து சேர்க்கப்படுகின்றனவென்றும் நன்கு விளங்கப் பெறுவோமென்பது இவ் வகையால், நிலத்தின் பயன் உடம்பிற்கு எத்துணை இன்றியமையாததாய் இருக்கின்றதென்பதூஉம் உணரப்படும்.
இங்ஙனம் நிலத்தின் கருப்பொருள்கள் நீரிற் கலந்து உடம்பினை மேன்மேல் வளர்த்துவருதலால் நீர் பயன்படுவதும் நிலத்தின் சேர்க்கையினாலேயா மென்பது இனிது பெறப்படும். இனி நீரேயன்றி, நமதுயிர் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத தான நெருப்புங்கூட நிலத்தின் கருப் பொருட் சேர்க்கையினாலே தான் பயன்பட்டு வருகின்றது. பழைய காலத்தில் சக்கிமுக்கிக் கல்லைத் தட்டி அதிற் பிறக்குந் தீப்பொறியிற் பஞ்சைப் பற்றவைத்துத் தீயை உண்டாக்கி வந்தார்கள்; அவ்வாறுண்டாக்கிய தீயும் வளர்ந்தெரிய வேண்டுமாயின் உலர்ந்த மரக்கட்டைகளை விறகாக மாட்டி எரிக்கவேண்டி யிருக்கின்றதன்றோ? நாகரிகம் மிக்க இக்காலத்திலுங் கந்தகத் தாற் செய்த நெருப்புக் குச்சிகளின் உதவியால் தீயை உண்டாக்கி விறகு நிலக்கரி மண்ணெண்ணெய்