❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖ |
முதலியவற்றின் சேர்க்கையால் அதனை வளர்த்துப் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள். இவற்றையெல்லாம் உன்னிப்பாய்ப் பார்க்கும்போது, நிலத்தின் கருப்பொருள்களான கல் பஞ்சு கந்தகம் விறகு எண்ணெய் முதலியவற்றின் சேர்க்கையாலன்றித் தீயைப் பயன்படுத்திக் கொள்ளல் ஏலாதென்பது நன்கு புலனாகின்றதன்றோ?
இனி, நீருந் தீயும்போலவே நாம் உயிரோடிருத்தற்குப் பெரிதும் வேண்டப்படுவதாயுள்ள காற்றும் இந் நிலத்தின் சேர்க்கையினாலேயே இயங்கப் பெறுகின்றது. யாங்ஙனமெனின், இந் நிலவுலகமானது மிகுவிரைவோடும் ஞாயிற்று மண்டிலத்தைச் சுற்றி ஓடுதலால், நிலத்தைச் சூழ்ந்துள்ள காற்று நமக்குப் பயன்படுமாறெல்லாம் இயங்குகின்றது; காலத்திற்கு ஏற்றபடி மாறிக் குளிர்ங் காற்றாய் வீசி வானத்திற் படர்ந்த நீராவியை இறுகச்செய்து மழை பெய்விக்கின்றது. இவ்வாறு நிலத்தின் சேர்க்கையினாலேயே நீருந் தீயுங் காற்றும் நமக்குப் பெரிதும் பயன்படுவனவாதல் தெற்றென அறியப்படும்.
இனி, நமதுடம்பு நிலத்தின்கண் உள்ள கருப்பொருள்களினாலேயே ஆக்கப்பட்டு உயிர்க்கிடமாய் நிலத்தின் கண்ணே உலவி, அவ் வுயிர் சென்றபின் திரும்பவும் மண்ணாய்ப் போகின்றது. நிலத்தினியற்கையும் உடம்பின் இயற்கையும் ஒன்றாய் இருத்தலால் உடம்பு உள்ளமட்டும் அதனை நில இயற்கையோடு ஒக்கவைத்துப் பாதுகாத்து வரல் வேண்டும். இவை இரண்டும் ஒத்த இயல்பின என்பதற்குச் சில குறிப்புகள் எடுத்துக்காட்டுவாம். உடம்பில் மருந்துகளால் நீங்காத புண் வந்தால், நல்ல களிமண்ணைத் தெளித்தெடுத்துப் பாகுபோற் கரைத்து ஒரு சிறு துணியின் மேற்றடவி அப்புண்ணிண்மேல் இட்டுக் கட்டிவந்தால் அப்புண் விரைவிற் காய்ந்து நீங்கிவிடும். உடம்பு முழுதுங் கொடிய நோய்களாற் பற்றப்பட்டவர்கள், ஒரு பெரிய தொட்டியில் நீரையுங் களிமண்ணையுஞ் சேர்த்துக் கரைத்து வைத்து, அதிற்றம் உடம்பு முழுவதையும் அரைமணி நேரம் அமிழ்த்தி வைத்திருந்து, பிறகெழுந்து தண்ணீர்விட்டுக் கழுவித் துடைத்துச் சிறிது வியர்க்க வைத்துச் சிலநாள் இங்ஙனமே விடாது செய்துவருவார்களாயின், அவர்கள் தம்முடம்பிலுள்ள நோய் நீங்கிச் செம்மை அடைவார்கள். மண்ணும் உடம்பும் ஒத்த இயல்பினவாய் இருத்தலினா-