பக்கம்:மறைமலையம் 1.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
230

❖ மறைமலையம் 1 ❖

லன்றோ அவை யிரண்டும் ஒன்று சேர்ந்தவுடன் அவற்றின் வேறான நோய்த்துகள் உடம்பைவிட்டு அகன்று விடுகின்றன. இன்னும் எந்நேரமும் மண்ணிலேயேயிருந்து உழவுத் தொழில் தோட்ட வேலை முதிலியன செய்துவருவோர் பெரும்பாலும் நோய் இன்றி வாழ்தலையும் நோய் வரினும் விரைவில் அது நீங்கப்பெறு தலையும், நீண்டகாலந் திண்ணிய உடம்பு உடையராய் உயிரோடிருத்தலையும், நாம் கண் கூடாய் அறிந்திருக்கின்றோம்.

இவ்வுண்மையை நுனித்துக் காணுங்கால், நீர் அருந்துதற்கும் உணவு சமைத்து உண்டற்கும் நாம் புழங்கும் ஏனங்கள் அத்தனையும் மட்பாண்டங்களாகவே யிருத்தல் பெரிதும் நலமுடைத்தாதல் தெளியப்படும். நம்முடம்பின் நலத்தைப் பாதுகாத்தற்கு மிகவும் இசைந்தனவான மட்கலங்களைப் பயன்படுத்துவது இழிவென நினைந்து, இக்காலத்திற் செல்வம் உடையவர்கள் செம்பு பித்தளை வெண்கலம் ஈயம் முதலியவற்றால் ஆக்கின கலங்களை மிகுந்த விலைகொடுத்து வாங்கிப் புழங்குகிறார்கள். இங்ஙனம் மட்கலங்களைத் தாழ்வாக நினைந்து விலைமிகுந்த செப்புக் கலங்கள் பித்தளை கலங்களைப் புழங்கி வீண் பெருமை தேடியதனாற் செல்வர்கள் அடைந்த பயன் யாது? உள்ள நாள் உள்ளமட்டும் பலவகை நோய்களுக்கு ஆளாகி இளமைக் காலத்தே இறந்தொழி வதேயாம். செம்பு பித்தளை வெண்கலம் ஈயம் முதலியவற்றிற் களிம்பொடு கூடிய நஞ்சு இருத்தலால், அஃது உணவின் வாயிலாக உடம்பிற் கலந்து நீரிழிவு, பித்தசோகை, பாண்டு, வெப்பு வப்பு முதலான பலகொடிய நோய்களை வருவிக்கின்றது. களிம்பில்லாத வெள்ளி, பொன் முதலியவற்றாற் செய்த கலங்களைப் புழங்கலாமென்றால், அவை மிக விலையேறப்பெற்றனவா யிருத்தலானும், அடிக்கடி புழங்குதலாற் றேய்ந்துபோதலானும், அசதிமறதி யாயிருந்தாற் பிறர் அவற்றைக் கவர்ந்து கொண்டு போய் விடுவராதலானும், எல்லாவகையாலும் மட்பாண்டப் புழக்கமே பெரியதொரு வசதியும் நலமுந் தருவதாகும் என்று உணர்ந்து இவற்றையே பயன்படுத்தி வருதல் வேண்டும்.

இந்த ஏதுவினால் நாம் இருக்கும் வீடுகளும் மண்ணினால் அமைக்கப்பட்டிருத்தல் நன்று. சுற்றிலும் மண் சுவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/263&oldid=1584125" இலிருந்து மீள்விக்கப்பட்டது