பக்கம்:மறைமலையம் 1.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
232

❖ மறைமலையம் 1 ❖

பட்டிகளில் மண்வீடுகளே அமைத்தல் வேண்டுமோ, கல்லுஞ் சுண்ணாம்பும் வைத்துக் கட்டிய அழுத்தமான வீடுகள் அமைத்தல் ஆகாதோவெனின்; உடம்பின் நலம் பேணுதற்குச் செங்கற் கட்டிடத்தினும் மண் வீடுகளே சிறந்தனவாயினுஞ், சூழப் பசுமையான தோட்டங்கள் இருக்குமாயிற் செங்கற் கட்டிடங்களுங் குடியிருத்தற்கு ஏற்றனவேயாகும். ஏனென்றாற், செங்கல் வீடுகளால் உண்டாகுந் தீமையினைச் சூழ உள்ள மரஞ்செடி கொடிகள் நீக்கி நலம் பயக்கும். யாங்ஙனமெனின், மரஞ் செடி கொடிகள் மண்ணிலிருந்து முளைப்பனவாய் மண்ணின் நுண்டு களையும் வெயிற் காற்று தண்ணீர் முதலியவற்றின் கருவையும் உட்கொண்டு பச்சைப் பசேலென்று செழுமையாய் விளங்கிக் காண்பார் கண்ணையுங் கருத்தையுங் குளிரச் செய்யும் இயல்பினவாய், இயங்கும் உயிர்கள் விடும் நச்சுக்காற்றை உரிஞ்சி அவ்வுயிர்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாத தூய காற்றைப் பகற்கால முழுதும் வெளிவிட்டுப் பேருதவி புரிதலால், அவற்றாற் சூழப்பட்ட கட்டிடங்கள் எவ்வகையவாயினும் அவற்றாற் சிறிதுந் தீங்குண்டாகாதென்று கடைப்பிடிக்க. அதுவேயுமன்றி, நிலத்தின் கண் உள்ள மின்பிழிவு இம் மரஞ்செடி கொடிகளில் ஏறி அவற்றின் வழியாக அவையுள்ள இடமெங்கும் பரவு மாதலால், தோட்டங்கள் தோப்புகள் சோலைகள் முதலியவற்றின் நடுவே யிருப்பவர்க்குப் பல வகையிலும் நன்மையே விளையும் என்க.

இனி, நிலமானது தன்கண் வாழும் மக்களும் மற்றையுயிர்களும் இனிது இருத்தற்கு வேண்டும் நலங்களைத் தந்து பெரிதும் பயன்பட்டுவரினும், அதன்கண் உறையும் மக்களும் ஏனைச் சிற்றுயிர்களுமோ அந் நிலத்தை அருவருக்கத் தக்கவகையாக அதன்கண் நிரம்ப அழுக்கேற்றி விடுகிறார்கள் நிலமகள் செய்யும் நன்றியை மறந்து அவளுக்கே பொல்லாங்கு விளைத்தலால் அதற்கேற்ற பயனையுந் தாம் அடைந்து துன்புறுகின்றார்கள். இவர் முன்பின் அறியாமற் சேர்க்கும் அழுக்குகளாலுங் குப்பை கூளங்களாலுந் தீ நாற்றம் மிகுந்து நச்சுக்காற்று வீசி அவ்வுயிர்களை மடித்து விடுகின்றன; மடியாதிருந்தனவும் வாழ்நாள் முழுதும் நோயால் வருந்துகின்றன. பகுத்துணர்வு இல்லா விலங்குகளும் பறவை களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/265&oldid=1583975" இலிருந்து மீள்விக்கப்பட்டது