பக்கம்:மறைமலையம் 1.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖
233

ஏனைச் சிற்றுயிர்களும் இங்ஙனம் நிலத்தைக் கெடுத்தல்பற்றிக் குற்றஞ் சொல்லப்படுதற்கு ஏலாவாயினும், பகுத்தறிவுடைய மக்கள் அங்ஙனம் நில இயல்பைக் கெடுத்தல் பெரிதுங் குற்றம் உடைத்தாம்.

மாந்தர் தாம் உறையும் இல்லங்களின் உள்ளே காற்றும் வெளிச்சமும் படாமல்வைத்து, அவ்வப்போது சேரும் அழுக்குகளையும் வெளியே அகற்றாமற் சேர்த்து வைப்பார் களாயின் அவ்விடங்களின் அடிநிலந் தன் தூயதன்மைகெட்டு நஞ்சாய்ப்போகும் ஆதலால், வீடுகளின் உள்ளே காற்றும் வெயில் வெளிச்சமும் நன்றாய் உலவும்படி சுற்றிலுஞ் சாளரங்கள் அமைப்பதொடு, வீட்டின் நடுவே மேற் கூரையையுந் திறப்பாக விடல் வேண்டும். சோழநாட்டின்கண் உள்ளவர், வீடுகளின் உள்ளே நடுவில் மேற்கூரையைத் திறப்பாகவிட்டுக் கீழே முற்றமும், முற்றத்தைச் சூழத் தாழ்வாரமும் அமைத்து வைக்கிறார்கள். இங்ஙனம் அமைப்பது மிகவும் நல்ல முறையாக இருக்கின்றது; ஏனென்றால், மேலே திறப்பாகவிட்ட கூரையின் வழியிாக வெயிலும் வெளிச்சமும் காற்றும் மழையும் வீட்டினுள் உலவுகின்ற மையால், வீடுகளில் அடுத்தடுத்து உண்டாகும் நச்சுக் காற்றும் நச்சுப்பொருள்களும் உடனுக்குடன் அப்புறப் படுத்தப்படுகின்றன; அதனால் வீட்டின் அடிநிலமுந் துப்புரவாக இருக்கும். பாண்டி நாட்டவரோ இங்ஙனம் வீடுகள் அமையாமற் கூரையை முழுதும் மூடிக் கீழே முற்றமுந் தாழ்வாரமும் இல்லாமற் சமைப்பதனாற் பெரும்பாலும் அவருடைய இல்லங்களெல்லாம் இருள் அடைந்தனவாய் நல்காற்று வருதற்கும் இடனின்றி யிருக்கின்றன. எந்நேரமும் வீட்டினுள்ளேயே இருப்பவர்களான பெண்பாலார் இத்தகைய வீடுகளில் இருப்பதனாற் பலவகை நோய்களுக்கு ஆளாவர் என்பதனை நாம் சொல்லுதலும் வேண்டுமோ? ‘பெண்பாலார் எங்ஙனம் ஆயினும் எமக்கென்?’ யாம் பொருள் தேடும் முயற்சியில் வெளியே சென்று உலவுகின்றோமாகலின், யாம் ஏராளமான வெளிச்சத்தையும் நல்ல காற்றையும் பெறுகின்றோம்; ஆதலால் யாம் அவ்வீட்டின் அமைப்பைப்பற்றி நினைக்கற்பாலம் அல்லம் என்று ஆண்பாலார் கருதுவராயின் அந்தோ! அஃது அவர்க்கே தீமையாய் முடியும் எங்ஙனமென்றால், எவ்வளவுதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/266&oldid=1597777" இலிருந்து மீள்விக்கப்பட்டது