பக்கம்:மறைமலையம் 1.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖
235

செய்து வருவதே நீண்ட வாழ்க்கைக்கும் மனத் தூய்மைக்கும் அறிவு விளக்கத்திற்கும் வழியாகும்.

இனி மக்களுடம்பினின்று கழிக்கப்படும் மலநீர்க் கழிவுகள் சேரும் இடங்களைப் பற்றிப் பேசுவது இன்றியமையாததாயிருக்கின்றது. திருத்தமான ஏற்பாடுகள் வாய்ந்த நகரங்களில் இவ்விடங்களைப்பற்றிக் கவலைப்படுதல் வேண்டாம். ஏனென்றால், அந்நகரங்களின் நிலத்தின் கீழ்க்கல்லுஞ் சுண்ணமுந் சேர்த்து அழுத்தமாகக் கட்டிய தூம்புகள் இருக்கின்றன; இத் தூம்புகளொடு தொடர்புடைய குழாய்களும், அக் குழாய்களின் மேல்திறப்பில் அகன்ற வாய்களும், அவ் வாய்களில் விழும் மலஞ் சிறுநீர்களை உடனுக்குடன் கழுவிக் கீழ்ப்போக்கும் நீர்த்தொட்டிகளும் ஒவ்வொரு வீட்டிலும் நன்றாக அமைக்கப்பட்டிருக்கின்றன. மற்று, இச் சிறந்த ஏற்பாடுகள் அமையாத நகரங்களிலும் ஊர்களிலுந்தாம் இவ்விடங்கள் பெரிதுந் தீங்கு தருவனவாயிருக்கின்றன. கல்லுஞ் சுண்ணாம்பும் இட்டு அழுத்தமாகக் கட்டப்படும் இடங்களே அக் கழிவுகள் போதற்கு இசைந்தன வாகும்; ஏனெனில், அங்கே அக் கழிவுகளில் உள்ள நச்சு நீர்கள் அடிநிலத்திற் சுவறமாட்டா. இவ்வாறன்றி வெறு நிலமாயுள்ள ஒரு சிற்றிடத்தில் அக் கழிவுகள் சேருமாயின் அந்நிலம் நஞ்சாய் போதலோடு, அடியிலும் அவற்றின் நச்சுநீர் சுவறி கிணறு குளம் முதலியவற்றின் ஊற்று நீர்களிற் கலந்து அந் நீரைப் பருகும் உயிர்கட்குப் பெருந் தீங்கினை விளைக்கும். வெறுநிலங்களிற் சேருங் கழிவுகளே இத்தனை தீமைக்கு இடஞ்செய்யுமாயின், வீடுகடோறும் நிலத்தில் ஆழ்ந்த குழிகள் எடுத்து அவற்றிற் கழிக்கும் மலநீர்கள் பின்னும் எவ்வளவு தீங்கினைத் தருமென்பது நாம் சொல்லல் வேண்டாம். திறந்த வெளிகளில் தொலைவிற் சென்று அக் கழிவுகைளப் போக்கும் நாட்டுப் புறத்தார் வழக்கமே மிகவுஞ் சிறந்ததாய்த் தோன்றுகின்றது. ஆனால், எல்லாரும் நாட்டுப்புறங்களிலேயே யிருத்தல் கூடாமல் நாகரிகம் வாய்ந்த ஊர்களிலும் நகர்களிலும் பலமுயற்சிகளின் பொருட்டு இருக்கவேண்டியவர்களாய் நேர்தலின் இவர்கள் எல்லாரும் வெளியிடங்களை நாடிச் செல்வது இயலாததேயாகும். ஆதலால், இவர்கள்தாம் இருக்குமிடங்களில் தம்மால் இயன்றளவு மலநீர்க் கழிவுகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/268&oldid=1597780" இலிருந்து மீள்விக்கப்பட்டது