பக்கம்:மறைமலையம் 1.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
236

❖ மறைமலையம் 1 ❖

நிலத்திற் சுவறாதபடி செய்துகொள்ளல்வேண்டும். இன்னும், இக் கழிவுகளைப் போக்குமிடங்களின்மேற் கூரையிட்டு மூடுவது ஆகாது; அப்படிச் செய்வதனால் அவற்றினின்று வெளிப்படுந் தீய நாற்றமும் நச்சுக் காற்றும் அடைப்பாகவுள்ள அவ் விடத்தை விட்டு அகலாதிருந்து உள் வருவார்க்குப் பெருந்துன்பத்தை உண்டாக்கும். மேலே திறப்பாகவிட்டு வெயில் வெளிச்சமும் நல்ல காற்றும் உள்ளே செல்லும்படி செய்தால் அவ்விடங்கள் துப்புரவாயிருக்கும். மேலே திறப்பாக விடுதலால் அடுத்துள்ள வீட்டவர்க்கு அவ் விடங்களிலிருந்து மேலெழுந்தீநாற்றம் பரவித் துன்பத்தைச் செய்யுமே எனின், அங்ஙனம் ஆகாமைப்பொருட்டு அவ்வழுக்குகளை உடனுக்குடன் அகற்றுதற்குரிய ஏற்பாடுகள் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யாமல் ‘இவை யெல்லாம் எவராற் செய்ய முடியும்!’ என்று சொல்லிச் சும்மா இருந்தாற், பிறகு அதனால் வருந் தீமைக்கு ஆளாகியே தீரல்வேண்டும். ஆதலால், மலநீர்க் கழிவு சேரும் இடங்களையும், ஏனைக் கழிவுகள் சேருஞ் சாக்கடைகளையும் மிகவுந் துப்புரவாக வைத்துக் கொள்வதில் எல்லாரும் நிரம்பக் கருத்துள்ளவர்களாய் இருத்தல் வேண்டும்.

இனி, மக்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாத நீர் நிலைகள் உள்ள நிலங்களின் இயல்பைச் செவ்வையாகப் பார்த்து வரல் வேண்டும். கூவல் குளம் கிணறு மடு ஏரி யாறு முதலான நீர் நிலைகள், சேறுஞ் சகதியும் நிறைந்த சதுப்பு நிலங்களில் இருந்தால் அவற்றின் நீரைப் புழங்கு தற்கு முந்தலாகாது; இந் நிலங்களின் இயற்கையால் இவற்றின் மேலாவது அல்லது இவற்றைச் சார்ந்தாவது உள்ள அவற்றின் நீர் நஞ்சாய் மாறுமாதலால் அது நோயை வருவிக்கும் கல்லும் மணலுமாய் உள்ள இடங்களுங், களிமண்ணுங் கந்தகமும் நிறைந்த நிலப்படைகளுங், கற்பாறைகளுந் தூயனவாதலால் அவற்றின்கண் நிற்கும் நீர் பருகு தற்கும் முழுகுதற்கும் பெரிதும் வாய்ப்புடையனவாகும். இந் நீர்நிலைகள் நல்ல நிலத்தின்கண் நிற்றலால் தூயனவாய் இருப்பினும், இவற்றைப் பயன்படுத்தும் மக்களும் மற்ற உயிர்களும் இவற்றைக் கெடுத்துவிடல் கூடும். ஒரே நீர் நிலையைக் குடித்தற்குங், குளித்தற்கும் இடமாக வைத்துக் கொண்டால் அதன்நீர் நஞ்சாய் மாறும். பருகுதற்குப் பயன்படுத்தும் நீர்நிலையைக் குளித்தற்குச் சிறிதுங் கையாளுதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/269&oldid=1584013" இலிருந்து மீள்விக்கப்பட்டது