❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖ |
கூடாது. நல்ல உடம்புள்ளவர்கட்கும் வியர்வைப் புழைகளின் வழியாக நச்சுப்பொருள்கள் வெளிவந்து தோலின்மேல் தங்கியிருத்தலாற், குளிக்கும் நீரில் அவை கலந்திருந்து அந்த நீரைப் பருகுவார் உடம்பினுட் சென்று செந்நீரிற் கலந்து பலவகை நோய்களை வருவிக்கும். ஆகவே பருகுதற்கு வழங்கும் நீர்நிலையை அந்த வகைக்கல்லாமல் வேறு எந்த வகைக்கும் பயன்படுத்தலாகாது. இதுவே யுமன்றிக் குளித்தற்குப் பயன்படுத்தும் நீர்நிலைகளையும் வரை துறை யின்றி வழங்குதல் குற்றமுடைத்தாம். ஒரு நீர்நிலையின் அகலத்திற்கும் ஆழத்திற்கும் அதினுள்ள மீன்களின் செறிவுக்குந் தக்கபடி சிலர் பலர் அதில் இறங்கிக் குளித்தலும் முழுகுதலும் வேண்டும். ஒரு சிறிய நீர்நிலையிற் பலர் இறங்கிக் குடைதலாகாது; அகன்ற ஆழமாகிய ஒரு பேர் ஏரியின்கட் பலர் இறங்கி நீராடுதல் குற்றமன்று. எனவே, அடிநிலத்தின் அகலத்திற்கும் அதன் றன்மைக்கும் ஏற்பவும், அதன்மேல் நிற்கும் நீரின் மிகுதிக்கு ஏற்பவும் நீர் நிலைகளிற் சிலர் பலர் இறங்கி நீராடும் வகையைப் பகுத்தறிந்து செய்தல்வேண்டும்.