238
12. உழவு
இனி, இந்நிலத்தினால் மக்கள் அடைதற்குரிய பெரும் பயன்களை உண்டாக்கி வைக்கும் ஒப்புயர்வற்ற தொழில் உழவு தொழிலேயாகும். உலகத்தில் மற்ற அலுவல்களைப் பார்ப்பவர் களெல்லாரும் உழவு தொழிலைச் செய்யுங் குடியானவன் கையையே எதிர்பார்ப்பவர்களாயிருக்கிறார்கள். எத் தொழிலைச் செய்தாலும் எவ்வளவு உயர்ந்த நிலையிலிருந்தாலும் எப்படிப் பட்டவர்களுக்கும் பசி யென்பதொன்று இருக்கின்றதன்றோ? பசியெடுத்த வேளையில் உணவு கொள்ளாவிட்டால் உடலும் பதைக் கின்றது. அறிவு கலங்குகின்றது. ஐம்பொறிகளும் நிலை தடுமாறு கின்றன; உடனே, உணவு கொண்டால் உடம்பு செழிக்கின்றது. அறிவு தெளிகின்றது. ஐம்பொறிகளுந் தத்தம் நிலை பிறழாமல் இயங்குகின்றன. ஆகவே, மக்களுயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டப்படுகின்ற உணவுப் பொருள்களை, மற்ற முயற்சிகளிற் புகுந்திருப்பவர்கள் தாமாகவே விளைத்துக் கொள்ளல் இயலாமை யாலுங், குடியானவன் விளைத்துத் தந்தால்மட்டுமே அவற்றைப் பெற்று உயிர் வாழ்பவர்களாய் இருத்தலாலும் மற்ற அலுவல்களைப் பார்ப்பவர்கள் எல்லாரும் உழவு தொழிலாளர் உதவியையே என்றும் எதிர்பார்த்திருக்கின்றார்கள். மற்ற முயற்சிகளை யெல்லாங் கைவிட்டிருந்தாலும் பயிர்த் தொழில் ஒன்றை மட்டுங் கைக்கொண்டு வந்தால் நன்கு உயிர் வாழலாம்; மற்ற முயற்சிகளை யெல்லாங் கைக்கொண்டும் பயிர்த் தொழில் ஒன்றை மட்டும் கைவிட்டால் உயிர் வாழ்தல் முடியாது. திரள் திரளாகப் பொன்னையும் மணிகளையுங் குவித்து வைத்திருக்கும் பெருஞ்செல்வர்களும் பசியெடுத்த காலங்களில் அறுசுவை யுண்டியைத் தேடுவார் களேயல்லாமல், தமது செல்வப் பொருளை நாடமாட்டார்கள்.