பக்கம்:மறைமலையம் 1.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖
239

பொன்னையும் மணிகளையும் விழுங்கிப் பசியாற்ற முடியுமோ? வயிறு நிறைந்த உணவுந் தெளிநீரும் பருகி னாலன்றி அப்பசி தீராதே! ஆதலாற் பசியைத் தீர்த்து உடம்பை வளர்த்து அதனால் அறிவையும் இன்பத்தையும் மேன்மேற் பெருகச் செய்யும் பலவகை உணவுப் பண்டங்களையும் விளைத்துத் தரும் உழவுதொழிலினுஞ் சிறந்தது வேறொன்றும் இல்லை யென்பது சிறிது ஆராய்ந்து பார்ப்பவர்க்கும் நன்கு விளங்கற்பாலதேயாம்.

இனி, உழவுத்தொழில் இல்லையாயின் நாவிற்கும் உடம்பிற்கும் இசைவான பல்சுவைப் பண்டங்களையும் பெறுதல் ஏலாது. அங்ஙனமன்று, மலைகளிலுங் காடுகளிலும் பழந்தரு மரங்களுங் கிழங்குதரு செடிகொடிகளுந் தாமாகவே ஏராளமாக விளையக் காண்கின்றோமே யெனின்; மக்கட் கூட்டஞ் சிறிதாய் இருந்த மிகப் பழைய காலத்திற், காடுகளிலும் மலைகளிலும் உழவுதொழிலின்றிக் கிடைத்த பழங் கிழங்கு வித்துக் கீரை முதலியன உணவுக்கு ஒருவாறு போதியவாய் இருந்தனவென்று கொள்ளினும், மக்கட் கூட்டம் பலகோடிகளாய்ப் பல்கிவரும் பிற்காலங்களில் தாமாகவே அவ்விடங் களிற் கிடைக்கும் அவை ஒரு சிறிதும் போதாவாகும். பண்டைக் காலங்களிலுங்கூடத் தாமாகக் கிடைக்கும் அவை பற்றாத நேரங்களில், மீன்களைப் பிடித்தும் பறவையினங்களை வீழ்த்தியும் விலங்கினங்களை வேட்டமாடிக் கொன்றும் அவற்றின் ஊனைப் பழைய நாளிலிருந்த மக்கள் தின்று தமது கொடும்பசியை ஒருவாறு ஆற்றிவந்தார்கள். அங்ஙனம் முயன்றும், பலநாட்களிற் பழங் கிழங்கு முதலியனவும் அகப்படாது போக, விலங்கினங்களுங் கிடையா தொழியப் பண்டைமக்கள் இடையிடையே பட்டினியும் பசியுமாய் இருந்த அந் நாட்களும் பல. அங்ஙனம் இடைக்கிடையே வருந்த வேண்டி வந்த நாட்களில் அவருள் அறிவாற் சிறந்த சிலர் தாம் வேண்டுமளவுக்கு உணவுப்பொருள் பெறுவான் வேண்டி ஆராய்ந்து, நிலத்தைக் கோலாற் கிளறித் தங் கையிற் கிடைத்த வித்துக்களை விதைக்க அவை முளைத்து ஒன்று பலவாய்ப் பல நூறாயிரங் காய் கனி விதைகளைத் தர, அம் முறையிலிருந்து நிலத்தை உழுது தமக்குந் தம்மினத்தார்க்கும் வேண்டுமளவு பயிர் விளைக்கக் கற்றுக்கொண்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/272&oldid=1597785" இலிருந்து மீள்விக்கப்பட்டது