பக்கம்:மறைமலையம் 1.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
240

❖ மறைமலையம் 1 ❖


இனி, நிலத்தைப் பண்படுத்தி விளைத்த பயிரைப் பாதுகாக்கும் மக்களின் முயற்சி இல்லையானால், உணவுப் பொருள்களைத் தரும் மரஞ்செடி கொடிகளும் பயிர்களுந் தாமாகவே வளர்ந்து நிலைப்படமாட்டா. இதனாலன்றோ நாகரிகமும் மக்கட் டொகுதியும் மிகுந்த இக் காலத்திலுங் கூட எத்தனையோ ஆயிரங் காத இடங்கள் வெட்ட வெளி யாய்ப் பயிர் பச்சைகளின்றி வெறுமையாய்க் கிடக்கின்றன. அங்ஙனமாயின் அகல நிகளத்தில் மிகப் பெரிய பெரிய மரக் காடுகள் மக்கள் முயற்சியின்றி யாங்ஙனம் உண்டாயின வென்றால்; மரமடர்ந்த காடுகள் பெரும்பாலும் மலைகளிலும் மலைசூழ்ந்த இடங்களிலும் பெரும் பள்ளத் தாக்கு களிலுமே உண்டாகின்றன; அஃது எந்த ஏதுவினாலென்று ஆராய்ந்து பார்த்த அறிஞர்கள், மலைசூழ்ந்த இடங்கள் கொடுங் காற்றுக்குங் கடும்பனிக்குஞ் சுடுவெயிலுக்குந் தப்பிக் கதகதப்பாய்ப் பயிர் வளர்ச்சிக்கும் இசைந்தனவாய் இருத்தலின் அவை அவ்விடங்களிற் கொழுமையாக வளர்கின்றன வென்று முடிவு கூறுகின்றார்கள். பெரும் பள்ளத்தாக்கான இடங்களும் அங்ஙனமே பெருங்காற்று முதலியவற்றைத் தடுத்து உள்ளே சிறிது அழன்றிருத்தலின் அவையுங் காடுகள் உண்டாவதற்கு ஏற்றனவாய் இருக்கின்றன. மற்று மலை யடுத்திராத வெட்ட வெளியான நிலங்களோ காற்று வெயில் முதலிய கடுமையாய்ப் படுதற்கு இடமாயிருத்தலால், அங்கே மக்களுடைய முயற்சியின்றிப் பயிர்கள் தாமாகவே விளைய மாட்டா. மக்களோ மண்வெட்டி கலப்பை கடப்பாரை முதலான கருவி கொண்டு மண்ணை ஆழமாகக் கிளறி அதனைக் கீழ் மேலாகப் புரட்டிக் காயவைத்து உரம் ஏற்றிச், சூழ மதில் எடுத்தேனும், வேலிகட்டியேனும், வரைப்பு உயர்த்தி யேனும் பனி காற்று விலங்கினங்களை இயன்ற வரையிற் றடைசெய்து கண்ணுங் கருத்துமாய்ப் பாதுகாத்து வருதலின் உணவுப் பயிர்கள் செவ்வையாக வளர்ந்து ஏராளமான பயனைத் தருகின்றன. எனவே, உணவுப் பொருள்களை நிரம்பப் பெற்று எல்லாரும் இனிது வாழ்தற்கு உழவு தொழிலும் அதனைச் செவ்வையாகச் செய்வோர் தொகையும் மிகுதியாக வேண்டப்படுமென்பது தானே பெறப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/273&oldid=1584038" இலிருந்து மீள்விக்கப்பட்டது