பக்கம்:மறைமலையம் 1.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖
241



இந் நிலவுலகத்தில் உழவு தொழில் செவ்வையாக நடைபெறுதற்கு நிரம்பவும் ஏற்றதான இடம் தமிழ்மணங் கமழும் இத் தென்னாட்டினுஞ் சிறந்தது பிறிதில்லை; யாங்ஙனமெனின், சூடுங் குளிர்ச்சியும் ஒன்றினொன்று மிகாமல் ஒத்த நிலையில் இருக்கப் பெறுவதும், யாறு ஏரி குளங் கூவல் முதலியவற்றால் நீர்வளம் மிக்கதுங், கீழ்க் கணவாய் மேற்கணவாய் மலைத் தொடர்களைச் சுற்றிலும் அடைப்பாகப் பெற்றுள்ளதும், பகலிரவு என்னும் இரு பொழுதுகளுஞ் சிறிது ஏறக்குறைய ஒத்து நிற்கப் பெறுவதும் இத்தென்னாடு ஒன்றேயல்லாமற் பிறிதில்லை யென்பது நிலநூல் வல்லார்க்கு நன்கு விளங்குமாதலின் என்க. இனி, இத் தென்னாட்டிற்கு அடுத்தபடியிற், சிந்து கங்கை நருமதை கோதாவரி கண்ணை முதலான பேரியாறுகளைச் சார்ந்த நாடுகளும் உழவு தொழிலுக்குப் பெரிதும் இசைந்தனவாக வைக்கப்படுதற்கு உரிமையுடையனவாகும். இத்துணை நீர்வள நிலவளங்களையுடைய நாடுகளைத் தன் அகத்து அடக்கிய இவ்விந்திய நாட்டிலுள்ள மக்கள் உழவு தொழிலை மட்டுஞ் செவ்வையாகச் செய்து வருவார்களாயின் இவர்களைப் போற் செல்வத்தானும் இன்பவாழ் வானும் மிக்கவர்களை இந் நிலவுலகத்தில் வேறெங்குங் காண்டல் அரிதாகும். ஆனால், இந்திய மக்களிற் பெரும் பாலார் உழவு தொழிலை மெல்ல மெல்லக் கைந்நெகிழவிட்டு வருவதோடு, கற்றவர்களாயிருப்பவர் பலவகை அலுவல்கள் பார்ப்பதிலுங் கல்லாதவர் பலதிறக் கைத்தெழிற் சாலைகளிற் கூலிவேலைகள் செய்திலுங் கருத்துடையவர்களாய்ப், பொதுநலங்கருதாது, அவ்வப்போது வருந் தந்நலங் கருதுபவர்களாய் உயர்ந்த நோக்கமின்றிக் காலங்கழிக்கத் துவங்கியிருக்கின்றார்கள். இங்ஙனமாக உழவு தொழில் கைவிடப்பட்டுச் சுருங்கி வருதலால், உணவுப் பண்டங்களும், அருகிவிட, அவற்றையடுத்து உயிர் வாழ்க்கைக்கு வேண்டிய எல்லாப் பொருள்களும் அஃகி விலை ஏற, எல்லாரும் மிடியுங் கவலையுந் துன்பமும் உடையவர்களாய்ப் பல்வகை நோய்களுக்கு இரையாகி ஆண்டு முதிரா முன்னரே இறந் தொழிகின்றார்கள்! ஐயகோ! இவ்வளவு பெருந் துன்பங்களுக்கு ஆளாகியும் இன்னும் நம்மனோர் நல்லறிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/274&oldid=1597787" இலிருந்து மீள்விக்கப்பட்டது