பக்கம்:மறைமலையம் 1.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖
243

கெடுத்துப் பிறரையுங் கெடுத்து நாளுக்குநாட் குறைவடைந்து போதல் நினைக்குந் தோறும் நெஞ்சை நீராய் உருக்குகின்றதே! ஓ இந்திய மக்களே! நீங்களும் உங்கள் கால்வழியும் மற்றை நாட்டவரைப் போலவே எல்லாச் செல்வங்களும் பெற்று இன்பத்தொடு நிண்டகாலம் உயிர் வாழல் வேண்டின், யாங் கூறுவதைச் சிறிது செவிசாய்த்துக் கேட்டு அதன்படி நடக்க முந்துமின்! உழவு தொழிலைத் தாழ்வாக நினைந்து அதனைக் கைந்நெகிழ விடாதீர்! உழவு தொழிலை முன்வைத்து அதனை நாளுக்குநாட் சிறக்க நடாத்தி அதன்பின் மற்றைத் தொழில்களைப் பார்க்க முயலுங்கள்! எல்லாச் செல்வங்களினும் நிலையானதும் அழியாததுங் கல்விச் செல்வம் ஒன்றே என்பதைக் கடைப்பிடித்து, முதலில் அதனை நந் தாய் மொழியாகிய தமிழ்மொழி வாயிலாகவும் அதன் பின்னர் ஆங்கிலம் வடமொழி முதலான மற்றை மொழிகளின் வாயிலாகவும் இக்கால இயல்புக்கு ஏற்றபடி பலவகையிலும் பயன்படுமாறு திருத்தமாகக் கற்க முந்துமின்கள்! அறிவும் ஒழுக்கமும் பொதுநல முயற்சியும் உடையாரே உயர்ந்தோ ராவரென்பதைக் கடைப்பிடியாக நுங்கள் உள்ளத்திற் பதியவைத்துப், பிறப்பளவில் உயர்வு தாழ்வு பாராட்டும் பேதைமைச் செயலை அறவை ஒழித்திடுமின்கள்! எல்லாரோடும் அன்பால் அளவளாவி ஒருவர்கொருவர் உதவியாய் ஒற்றுமையுற்று வாழ உளங்கனிந் தெழுமின்கள்! கல்வியறிவா லேனும் ஒழுக்கத்தாலேனும் பொது நல முயற்சியாலேனும் வேறுபல நலங்களாலேனும் உயர்ந்தோரை அவரவர்க்குள்ள உயர்வு பற்றி நன்கு பாராட்ட வேண்டுமே யன்றி, இவரிடத்து எல்லா நலங்களும் அமையவில்லையே! என்று கூறி ஒருவரிடத்து இல்லாத நலங்களுக்காக அவரை இகழ்ந்து கூறுங் காடிய தீயவழக்கத்தை வேரொடு களைந்தெறி மின்கள்! இவைகளைக் கருத்திற் பதித்து ஒழுகாதவரையில் இந்திய மக்களாகிய நீவிர் ஏனை நாட்டவரைப்போல முதன்மை பெற்று விளங்கல் எஞ்ஞான்று மில்லை; இந்நலங்களால் உயர்ந்து முதன்மை பெற்றுத் திகழும் ஏனை நாட்டவர்க்கு நீவிர் அடிமைகளாய்க் கிடந்து வருந்தி யொழிதல் வாய்ப்புடைத்தேயாம். அது நிற்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/276&oldid=1597790" இலிருந்து மீள்விக்கப்பட்டது