பக்கம்:மறைமலையம் 1.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
244

❖ மறைமலையம் 1 ❖

மற்றை நாட்டவரெல்லாங் கைத்தொழின் முயற்சியால் மேன்மேலுயர்ந்து விளங்கல் கண்கூடாய் அறியக் கிடப்பவும், இந்திய நாட்டவரும் அம் முயற்சியிற் றலமைபெறுதலை வற்புறுத்தாமல் உழவுதொழின் முயற்சியையே அவர்க்கு மிக்கெடுத்துக் கூறிய தென்னை யெனின்; இந்திய நாடல்லாத மற்றைய வெல்லாஞ் சூடுங் குளிர்ச்சியும் ஒத்துநில்லாமற் பெரும்பாலுங் குளிர் மிகுந்தும் ஒரு சில இடங்கள் சூடு மிகுந்தும் இங்ஙனமே உழவு தொழிலுக்கு ஏலாத வேறு பல தன்மைகள் வாய்ந்தும் இருத்தலால், அந்நாட்டவரெல்லாங் கைத்தொழிலை முதற்றரமாகவும் உழவுதொழிலை இரண்டாந் தரமாகவும் வைத்து நடப்பித்தல் பொருத்தமேயாம். மற்று, நம் இந்திய நாடோ அவை போலன்றிச் கடுங் குளிரும் ஒருநிலைப் பட்டு உழவுக்கேற்ற வேறு பல தன்மைகளும் வாய்க்கப் பெற்றிருத்தலால், இந் நாட்டவர் உழவு தொழிலையே முதன்மையாக வைத்துச் செய்யக் கடமைப்பட்டிருக்கின்றார்கள். இவ்விந்திய நாட்டுள்ளும் உழவு தொழிலுக்கு ஏலாத இடங்கள் சிறுபான்மை ஆங்காங்கு இருத்தலால், அவ்வவ்விடங்களிலும் அவற்றைச் சூழ்ந்துள்ள ஊர்களிலும் உள்ளவர்களே கைத்தொழின் முயற்சியை முதலாக வைத்துச் செய்தற்கு உரியர். இவ்வாறு கைத்தொழிலை அதற்கேற்ற சில இடங்களில் வைத்து இரண்டாந் தரமாகவும், உழவுத் தொழிலை அதற்கேற்ற எல்லா இடங்களிலும் வைத்து முதற்றரமாகவும் நடத்தி வருவார்களாயின் நம்மிந்தியர்கள் அளவுபடாத செல்வவளம் மலியப் பெற்று இனிது வாழ்வார்கள். உழவு தொழிலாற் பெருகும் உணவுப் பொருள்களையும் பிறவற்றையும் வாங்கிக் கொண்டு போகும் பொருட்டு மற்றை நாட்டவர்களெல்லாம் இங்கேவந்து திரண்டு பொன்னும் மணியும் வேறு அரும் பண்டங்களுந் தருவராகலின் அதனால் இந்தியர் பெருஞ்செல்வராவர்; மற்றை நாடுகளில் உள்ள செல்வ மெல்லாம் இந்திய நாட்டின்கண் வந்து குவியும்.

அற்றன்று, உழவைக் கைவிடினுங் கைத்தொழிலை மிகுதிப் படுத்தினால் அதனால் வரும் பெரும் பொருளைக் கொண்டு உணவுப் பண்டங்களெல்லாம் எளிதிற் பெறலாமன்றோவெனின்; நம் இந்திய மக்கள் கைத் தொழிலைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/277&oldid=1584132" இலிருந்து மீள்விக்கப்பட்டது