பக்கம்:மறைமலையம் 1.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖
245

பெருக்கி அதனாற் பல அரும்பண்டங்களைச் செய்வராயினும் நெடுங்காலங் கைத் தொழிலிற் பழகி அதன் நுணுக்கங்களை முற்றும் அறிந்திருக்கும் அயல் நாட்டவர் செய்யும் அரும் பண்டங்களைப் போல் நம்மவருஞ் செய்து அவற்றை எளிய விலைக்கு விற்றல் கூடாமையானும், அன்றி அங்ஙனஞ் செய்து அயல்நாடுகளில் விற்கப் போனாலும், முன்னமே அத்தகைய பண்டங்கள் மலிந்திருக்கும் அவ் அயல் நாட்டில் உள்ளார் அவற்றை விலை கொள்ளாராகலின், அது ‘கொல்லத் தெருவில் ஊசி விற்கப் போனது’ போற் பயன்படாது போமாதலானும் அல்லது அப்பண்டங்களை இவ்விந்தியாவினுள்ளேயே விலைப்படுத்துவே மெனின் உழவு தொழிற் சுருக்கத்தால் உணவு செவ்வனே பெறாது முன்னமே பட்டினியும் பசியுமாய்க் கிடக்கும் நம் இந்திய மக்களிற் பெரும்பாலோர் உணவுப் பொருளை விடுத்து வேறு அப்பண்டங்களை விலை கொள்ளாராதலானும், அன்றி அப் பண்டங்களை எங்ஙனமாயினும் வருந்தி விற்று, விற்றதனாற் பெற்ற பொருள் கொண்டு உணவுப் பொருள்களை வாங்கிக் கொள்வேமெனின் அப்போதும் உணவுப் பொருள்கள் விளைக்குஞ் சில நாட்டவரையே சார்ந்திருக்க வேண்டுதலானும், அச் சில நாட்டவரும் ந்தியாவின்கண் உள்ள முப்பத்துமூன்று கோடி (இது பதிப்புக்காலத்தில் இருந்த மக்கள் தொகைக் கணக்கு இப்போது இது மூன்று மடங்காகிவிட்டது) மக்கட்கும் இந் நிலத்தின்கண் உள்ள பெருந்தொகையின ரானமற்றை நாட்டவர்க்கும் உணவுப் பொருள் நல்கல் ஒருசிறிதும் ஏலாமையானுங் கைத் தொழிலினும் உழவுத்தொழிலே இந்தியர்க்கு மிகச் சிறந்ததா மென்று துணிக.

அற்றேற், கைத்தொழில் பெருகாவிடின் இந்தியாவிலுள்ள செல்வமெல்லாம் அயல்நாட்டவர் செய்யும் அரும்பண்டங்களை வாங்கும் வழியே அந் நாடுகளுக்குச் சென்று அங்குள்ளாரைச் செல்வராக்க, இந்தியாவிலுள்ளார் நாளுக்கு நாள் வறியராய்ப் போவரேயெனின்; அவ் அயல் நாடுகளில் உழவுத்தொழில் மிகுதியாய் நடத்தற்கு ஏற்ற காலமும் இடனும் இல்லாமையால், அந்நாட்டவர்கள் எவ்வளவுதான் செல்வத்தைத் திரட்டிக் கொண்டாலும், அச்செல்வமெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/278&oldid=1597792" இலிருந்து மீள்விக்கப்பட்டது