❖ மறைமலையம் 1 ❖ |
உணவுப் பொருள்கள் வாங்கும் பொருட்டுத் திரும்பவும் இவ்விந்திய நாட்டுக்கே வந்து சேரவேண்டும். ஆதலால், அயல் நாட்டவர் செய்து கொண்டு வந்து விலையாக்கும் அரும் பண்டங்களை வாங்குதலால் நம் இந்தியநாடு ஒருகாலத்தும் வறுமையடையாது. உணவுப் பொருள்களை ஏராளமாய்ப் பெருக்கும் உழவுத்தொழில் ஒன்று மட்டுஞ் செவ்வையாக நடக்குமாயின், எல்லா நாட்டவர் செல்வமும் இவ்விந்திய நாட்டில் வந்து தாமே குவிந்துவிடும். இது தெரித்தற் பொருட்டன்றோ தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார்,
“சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை”
(குறள் 1031)
என்றும்,
“பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்”
(குறள் 1034)
என்றும் அருளிச் செய்தார். ஆகையால் உழவு தொழிலை மட்டும் நம் நாட்டவர் நாளுக்கு நாட் பெருகச் செய்து வருவராயின், அயல் நாட்டவர் தம் பண்டங்களை வாங்குதலால் நமது செல்வம் போய் விடுமே என்று அஞ்ச வேண்டுவதில்லை. உழவுத் தொழிலைக் கருத்தாய்ப் பாராமற் பிறர்க்கு ஊழியஞ் செய்து பிழைக்குங் கூலித் தொழிலையே சிறந்ததாக எண்ணிச் செய்து கொண்டு, தம் மனம் போனபடி அயல்நாட்டவர் பண்டங்களை வாங்கிக் கொண்டு வருவராயின் இவ்விந்திய நாட்டவர் தஞ்செல்வ மெல்லாம் இழந்து வறியராதல் திண்ணம். ஆகவே, உழவு தொழில் ஒன்றே எடுக்க எடுக்கக் குறையாத பருஞ் செல்வத்தைத் தரும் உலவாக்கிழியாய்த் திகழ்தலால், அதனைச் சிறக்கச் செய்பவர்கள் எதற்கும் எக்காலத்தும் அஞ்ச வேண்டுவதில்லை. உழவு தொழிலின் முதன்மையை ஆராய்ந்து பாராமற், கைத்தொழிலைப் பெருக்க வேண்டுமென்றும், அயல்நாட்டுப் பண்டங்களை வாங்கலாகாதென்றும் வெறுங்கூவுதலைச் செய்வோரின் ஆரவாரம் ஒருசிறிதும் பயன்றராது.