பக்கம்:மறைமலையம் 1.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖
247


உழவை கைவிட்டுக் கைத்தொழிலையே எங்கும் பெருகச் செய்து வந்தால் உழுதொழில் செய்வோரெல்லாம் அதனை விடுத்துக் கைத்தொழிலாற் பெரும்பொருள் பெறலாம் என்னும் நசைகொண்டு தொழிற்சாலைகளுள் மிகுதியாய் வந்து சேர்வர்; அதனால் உணவுப் பண்டங்கள் விளைச்சல் குறைந்து விலையேறும்; வறுமையுந் துன்பமும் நாளுக்கு நாள் மிகுதிப்படும். தொழிற்சாலைகள் உள்ள இடங்களைச் சூழ இருக்கும் ஊர்களில் நன்செய்ப்பயிர் புன்செய்ப்பயிரின் றொழில்கள் செவ்வனே நடத்தப் படாமற் குறைந்து போதலே, நாம் கூறும் உண்மைக்குத் தக்க சான்றாம். மேலும், நம்நாட்டில் உள்ள தொழிலாளிகள் கல்வியில்லாதவர்களா யிருத்தலால், அவர்கள் உழவு தொழிலின் மேன்மையை ஆழ்ந்து பாராதவர்களாய், அவ்வப்போது உடனே கையிற் கிடைக்குங் கூலி மிகுதியினையே பெரிதும் பாராட்டுகின்றவர்களா யிருக்கின்றார்கள். உழவுத்தொழில் மிகுந்த வருத்தந் தருவதோடு பயன்றருவதும்ஐயுறவுக்கிடமாய், அப்பயனும் நீண்டநாட் சென்று வருவதாய்க் காணப்படுதலின், அதன் அருமை தெரியாத நம்மனோர் தமக்கு வேறுவழியில் வருவாய் கிடைப்பதானால் அதனைச் சிறிதுந் திரும்பிப்பாரார்கள். உழவு தொழிலைக் கைந் நெகிழ விடுதலால் வரும் பொல்லாங்கு துவக்ககத்தில் தெரியா விட்டாலும், நாட்செல்லச் செல்லச் கடைசியில் அது நீக்குதற்குக் கூடாதபடி வந்து மக்களையும் மற்ற உயிர்களையும் மடிவிக்கும், உயிர்கள் வேண்டுமளவு உணவுப் பொருள் பெறாது துடிக்குங்கால், அவர்கள் கைத்தொழில் வன்மையாற் செய்த பண்டங்களுந்திரள் திரளாய்க் குவிந்த பொன்னும் மணியும் அவர் படுங் காடுந்துயரினைப் போக்குமோ! அரிசி கோதுமை காய் கனி கிழங்குகளுக்கு நிகராகக் கைத்தொழிலாற் செய்த அரும் பண்டங்களையும் பொன்னையும் மணியையும் வாரிவாரித் தின்று உணவின்மையால் வந்த பசித்துன்பத்தை மாற்றிக் கொள்ள முடியுமோ! எள்ளளவும் முடியாதே! ஆகையாற், கைத் தொழிலைப் பெருக்கி என்செய! இதனாற் கைத்தொழிலை அறவே கைவிடவேண்டுமென்பது எமது கருத்தன்று. நம்மவரது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/282&oldid=1597797" இலிருந்து மீள்விக்கப்பட்டது