பக்கம்:மறைமலையம் 1.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
250

❖ மறைமலையம் 1 ❖

சேர்ந்தவளவானே மிக்க சுருசுருப்புடையதாய் இயங்காநிற்க, அப்போது அதன் இயக்கத்திற்கு உதவியாய் மூளையில் ஓடுஞ் செந்நீரில் ஒரு பெரும்பகுதி தீனிப்பையின் நரம்புகளில் ஓடிவந்து பரவுகின்றது. அவ்வாறு மூளையின் செந்நீர் அதனைவிட்டுத் தீனிப்பைக்குச் செல்லுதலால், மூளை செந்நீர் குறைந்து உறக்கத்திற் செல்கின்றது. ஆகவே, உணவெடுத்தபின் உறக்கம் வருவது இயற்கை நிகழ்ச்சியா யிருத்தல் கண்டு கொள்க.

இனி, உடம்பு உயிரொடுகூடி நிலைபெறுதற்கும் உயிரின் நினைவுகளை வெளிமுகமாக்கி வளர்ப்பதற்கும், உணவானது அதற்கு இன்றியமையாததாய் இருக்கின்றது. அவ்வளவு சிறந்த உணவை ஏற்று அதனை நமதுடம்புக்குப் பல வகையிற் பயன்படுத்துந் தொழிலில் தீனிப்பை முனைந்து நிற்குங்கால், அதன் றொழிலுக்கு இடையூறு வராதபடி மூளையானது தூக்கத்திற் செல்ல வகுத்த இறைவன்செயல் எத்துணை வியக்கற்பாலதாயிருக்கின்றது! இதுகொண்டு, மூளையானது மிகுந்த சுறுசுறுப்புடையதாய் ஒன்றை அறிவதிலும் ஒன்றைச் செய்வதிலும் முனைந்து நிற்கும் நேரங்களில், தீனிப்பையானது முயற்சியின்றி ஓய்ந்திருக்க வேண்டு மென்பதும், மற்றுத் தீனிப்பை உடல் ஓம்புதற்கு இன்றியமையாததான வுணவினை ஏற்று அதனைச் செரிக்கச் செய்யுந் தொழிலில் ஈடுபட்டு நிற்குங் கால் மூளையானது அறிதல் ஏவுதல் முதலான தொழில்களைச் செய்யாமல் அமைந்திருக்க வேண்டுமென்பதும் எவர்க்கும் இனிது விளங்காநிற்கும். தீனிப்பை மிகுதியாய் இயங்கும்போது மூளையிலுள்ள செந்நீரில் ஒரு பெரும்பகுதி அப்பையின் நரம்புகளிற் செல்லுதலால், அந் நேரத்தில் மூளைக்கு முயற்சியினைக் கொடுப்பவர்கள் தமது மூளையினைப் பழுது படுத்துவதுடன், தமது தீனிப்பையின் வலிவினையுங் குறைப்பவராவர். நீண்ட வாழ்க்கையினைத் தருதற்குக் கருவியான மூளையுந் தீனிப்பையும் பழுதுறுமானாற், பலவகைக் கொடு நோய்கள் கிளைத்து அவரையுயிர்மாளச் செய்யும். ஆகவே, உணவருந்தும் வேளையிலுணவுப் பண்டங்களை நன்றாய்ச் சுவைத்து அவைகளை மெல்ல விழுங்குதல் வேண்டுமே-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/283&oldid=1584149" இலிருந்து மீள்விக்கப்பட்டது