பக்கம்:மறைமலையம் 1.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖
251

யல்லாமல், அந் நேரத்தில் வேறொன்றனை நினைதலும் பிறரொடு பேசுதலும் ஆகா. அங்ஙனமே, உணவருந்தியபின் வரும் உறக்கத்தையுஞ் சிறிதுந் தடைசெய்யாமற், பகற் காலமாயிருந்தால் அரைமணி நேரத்திற்குக் குறையாமலும், இராக்காலமாயிருந்தால் மூன்றுமணி நேரத்திற்குக் குறையாமலும் நன்றாய் அயர்ந்துறங்குதல் வேண்டும்.

ஏனென்றால், ஓர் இரவு உறக்கங் குறைந்தால் ஒருவனுக்கு அவனுடம்பிலுள்ள சதையிற் சிறிதேறத் தாழப் பதினாறு பலம் எடையுள்ளது குறைந்துபோதலை இஞ்ஞான்றை அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டு பிடித்திருக்கின்றனர். இன்னுந், தூக்கக் குறைவினால் உடம்பின் சதையேயன்றி, அறிவின் உரமுங் குறைந்து போகின்றது. இதனையும் அமெரிக்க அறிஞர்கள் ஆராய்ந்து கண்டிருக்கின்றனர். ஒரு கல்லூரியிற் பயிலும் மாணவரில் இரு குழுவினர் இவ்வாரய்ச்சிக்கென்று பிரித்தெடுக்கப்பட்டனர். அவருள் ஒரு குழுவினர் வெள்ளிக்கிழமை இரவு முழுமையும் ஒருவகைச் சீட்டாட்டம் ஆடும்படி ஏவப்பட்டனர்; மற்றொரு குழுவினர் வழக்கம்போல் அன்றிரவு முழுதும் அயர்ந்துறங்கும்படி விடப்பட்டனர். அடுத்த நாட் சனிக்கிழமை காலையில் அவ்விருவகை மாணவரும் ஆசிரியரின் எதிரே வருவிக்கப்பட்டு; எழுநூற்று நாற்பத்தொன்பதை அறுநூற்று முப்பத்தெட்டால் நினைவினாலேயே பெருக்கித் தொகைகாணும் படி அவராற் கற்பிக்கப்பட்டனர். வெள்ளிக் கிழமையிரவு முழுதும் நன்றாய்த் தூங்கியெழுந்த மாணவர்கள் அக் கணக்கினை விரைவாகவும் பிசகுபடாமலுந் தமதுள்ளத்திலேயே எளிதிற் பெருக்கித் தொகை கண்டனர். மற்று, அவ்விரவு முழுதும் விழித்திருந்து சீட்டாடிய இளைஞர்களோ அக் கணக்கினை விரைந்து செய்ய மாட்டாதவரானதுடன், அதனைப் பிழைபாடாகவுஞ் செய்து முடித்தனர். அதுவேயுமன்றித், தூக்கங்கெட்ட பிள்ளைகளிற் சிலர் தாம் எண்களை நினைவுகூறக் கூடவில்லை யென்றனர்; மற்றுஞ் சிலர் தம் நினைவு ஒரு வழிப்படாமல் அலையலாயிற் றென்றனர்; வெளிச்சங் கண்ணிற் படக்கூடவில்லை யென்றனர் வேறு சிலர்; மண்டை கலங்கி விட்டதென்றனர் பின்னுஞ் சிலர்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/284&oldid=1597800" இலிருந்து மீள்விக்கப்பட்டது