பக்கம்:மறைமலையம் 1.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
252

❖ மறைமலையம் 1 ❖

யான் எதனையும் நன்கறியக் கூடவில்லை யென்றனன் ஒரு சிறான்; மற்றும் ஒரு சிறுவன் எனது பின்தலையான் ஒரு கற்பாறைமேற் கிடந்து உறங்கி எழுந்தாலெனத் தோன்றியது என்றனன். இவ் வாராய்ச்சி கொண்டு, ஓர் இராப்பொழுது முழுமையுங் கண்விழித்திருத்தல் உடம்புக்கும் உயிருக்கும் எத்துணைப் பொல்லாங்கினைத் தருவதென்பது நன்கு புலனாகின்ற தன்றோ?

இனி, ஓர் இரவில் எட்டுமணி நேரந் தூங்குவார்க்கும், அதில் இரண்டுமணி நேரங்குறைய ஆறுமணி நேரந் தூங்குவார்க்கும் உள்ள உடல்நல மனநல வேற்றுமையினையும் மேற்குறித்த ஆசிரியர்களே ஆராய்ந்து காட்டியிருக்கின்றனர். முயற்சி அவிந்திருக்கும் வேளைகளிற் கழியும் உடற்சூட்டை விட, முயற்சி மிகுந்திருக்கும் வேளைகளிற் கழியும் உடற்சூடு மிகுதியாயிருக்கின்றது. எட்டுமணி நேரந் தூங்கியெழுந்த மாணவர்கள் பதினைந்து நிமிடம் முறுகிய அறிவுமுயற்சி செய்ததில் நூற்றுக்குப் பத்து விழுக்காடான ஆற்றலே அவர்கள் உடம்பினின்றுங் கழிந்தது. ஆனால், ஆறுமணி நேரந் துயின்றெழுந்த பிள்ளைகள் அத்தகைய அறிவுமுயற்சி செய்ததிலோ, உடம்பின் ஆற்றல் நூற்றுக்கு இருபத்தைந்து விழுக்காடு அவர்கள் இழந்துபோனமை விளங்கலாயிற்று. இவ்வாராய்ச்சியினால், மூளையுழைப்புள்ளவர்களுக்குத் தூக்கங் குறைய குறைய, அவர்களுடைய உடம்பின் வலிவுங் குறைந்து போதல் நன்கு புலனாகின்றதன்றோ?

இன்னும் ஒரு மகளிர் கல்லூரித் தலைவியார், தம் மாணவிகள் கல்விப் பயிற்சியில் வேண்டுமளவு திறம்பெறாதிருத்தல் கண்டு, அவர்கள் ஒவ்வொரு நாளும் பிற்பகலில் ஒருமணி முதல் இரண்டுமணி வரையில் நன்றாய் உறங்கி எழுமாறு கட்டளையிட்டனர். அவ்வாறே அப்பெண் பிள்ளைகள் செய்து வந்த சில நாட்களிலெல்லாம், அவர்கள் கல்வியில் திறமுந் தேர்ச்சியும் பெற்றமை தெளியப்பட்டது.

இங்ஙனமே, அமெரிக்க ஆசிரியர்கள் கல்வி பயலுந்தம் மாணவர்கள்பாற் செய்துபார்த்த ஆராய்ச்சிகள் அத்தனையும் இரவிலும் பிற்பகலிலும் வேண்டுமளவு அயர்ந் துறங்கி யெழும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/285&oldid=1584154" இலிருந்து மீள்விக்கப்பட்டது