பக்கம்:மறைமலையம் 1.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
254

❖ மறைமலையம் 1 ❖

பார்த்துத், தமது வாழ்நாளை நீளச் செய்வார்களாக!

மேலே, உணவெடுத்தபின் தூக்கம் இயற்கையாய் வருவதற்குக் காரணம் மூளையிருள்ள செந்நீரிற் பெரும்பகுதி தீனிப்பைக்குச் செல்லுதலேயாம் என்பதனை விளக்கிக் காட்டினாம். இனி, இதனின் வேறான பிறிதொரு காரணத்தாலுந் தூக்கம் வருதலைச் சிறிது விளக்கிப் பேசுவாம்:

ஒருவன் ஓர் உடல் முயற்சியைச் செய்யுங்கால், அதனை அவன் செய்து முடித்தற்குக் கருவியாயிருப்பன அவனுடம்பிலுள்ள நரம்புக் கட்டுகளே (Muscles) யாம். எத்தகைய தொழிலைச் செய்வதாயிருந்தாலும் நரம்புக் கட்டுகளின் உதவியின்றி அதனைச் செய்தல் இயலாது; இத்துணை இன்றியமையாத நரம்புக்கட்டுகளின் இயக்கத்திற்குஞ் செந்நீர் ஓட்டங் கட்டங் கட்டாயமாய் வேண்டப்படுகின்றது. இந் நரம்புக் கட்டுகள் இயங்கும் போதெல்லாம் அக்காரத்தையே (சருக்கரையினையே) தமக்கு உணவாகக் கொண்டு அதனை எரித்துவிடுகின்றன; அதனால் செந்நீரிலுள்ள அக்காரத்தின் அளவு குறைந்து விடுகின்றது. அவ்வாறு செந்நீரிலுள்ள அக்காரத்தின் அளவு குறையக்குறைய உடலில் தளர்ச்சி ஏற்படுகின்ற தென்க. ஆழ்ந்து மூச்சு விடுவது ஓரளவு மனிதனின் தளர்ச்சியைப் போக்குமெனினும் அவனுடலில் ஏற்படும் தளர்வு அவனால் மீண்டும் வேறொரு பணியைச் செய்ய முடியாத அளவு உண்டாகின்றமையான் அவன் அத்தளர்வினைப் போக்கும் பொருட்டுத் துயில முற் படுகின்றான்.

இனித் தொழில் செய்வது மட்டுமன்றி மக்களைத் தளர்வடையச் செய்யும் செயல்கள் பல உள. அவற்றையாம் சிறிது விளக்கிச் செல்வாம்:

மக்களில் சிலர் பயனற்ற பேச்சுக்களினால் பிறரைத் தளர்வடையச் செய்கின்றனர். அவர்கள் பயனற்ற வினாக்களைப் பிறரிடம் வினவியும் தம்மைப் பற்றியே பெருமையாகப் பயனற்ற பலவற்றைப் பேசியும் பிறரைத் தளர்வடையச் செய்து அத்தளர்வினால் அவர்கள் உறக்கம் கொள்ளும்படி செய்கின்றனர். அவர்களுடைய பேச்சும் செயலும் பிறரை எவ்வாறு தளர்வடையச் செய்கின்றனவோ எனின் ஏதோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/287&oldid=1584157" இலிருந்து மீள்விக்கப்பட்டது