❖ மறைமலையம் 1 ❖ |
மணி நேரம் துயில்வோரும் உண்டு. நீண்டநேரம் துயில்வோர் நெடுநேரம் உறங்கிய பின்னரும் உடலில் சோர்வு இருப்பதாக உணர்வர். அஃது உண்மையில் சோர்வன்று; அவர்களுடைய உடலில் கோளாறு உள்ளது என்பதையே தெள்ளிதிற் புலப்படுத்துகின்றது. நல்ல உறக்கம் என்பது எவ்வளவு நீண்ட நேரம் தூங்குவது என்பதன்று; உறக்கத்தின்கண் எவ்வளவு ஆழ்ந்து உறங்கியது என்பதேயாம்.
குறைந்த நேரம் தூங்குவதால் ஏற்படும் தீமைகள் பல இரவு ஆழ்ந்த உறக்கமில்லையேல் மறுநாள் படிப்பதுகூட இயலாது. மூளையின் ஆற்றல் குறைந்துகொண்டே வரும். சிலர் இரவிலே நல்ல உறக்கத்தின்கண் விழித்துக் கொள்வர். அதன்பின்னர் உறக்கமே வாராது வருந்துவர். இக் குறையைப் போக்குவதற்குப் பகலில் உடலுறுப்புகளுக்கு நல்ல ஓய்வு தருதல் வேண்டும்.
இங்ஙனமே நன்றாக ஆழ்ந்து உறங்குவதற்கு உறங்கும் அறையும் செம்மையுற அமைதல் வேண்டும். உறங்கும் அறையின் சுவர்கள் நீலம் அல்லது பச்சை வண்ணத்தால் பூசப்பட்டிருத்தல் வேண்டும். மற்றுச் சிவப்பு மஞ்சள் முதலிய வண்ணங்களோ எனின் அவை கண்களுக்கு அதிக ஒளியைக் காட்டிக் கண்கள் கூசும்வண்ணம் செய்யுமென்க.
உறங்கும் அறையினுள் ஒலி புகுதல் ஆழ்ந்து துயில்வோருக்குக் கெடுதி பயக்கும். அறையினுள் ஒலி புகின் அவர் துயில் கெடும். மேலும் அவ்வொலி துயில்வோரின் உடலிற் பாயும் செந்நீரின் அழுத்தத்தை மிகுதிப்படுத்துமென ஆராய்ச்சியாளர் கூறுவர். ஒலியற்ற வீட்டின்கண் உறங்குதல் பெரும் பேறெனக் கருதுவர்.
உறங்கும் அறையின்கண் பல சாளரங்கள் இருத்தல் வேண்டும். எப்பொழுதும் தூய காற்று அறையினுள் வந்தவாறே இருத்தல் வேண்டும். ஓர் அறையில் பலர் உறங்குதல் நோய்க்கு இடங்கொடுத்தல் போலாம். இதனால் விளையும் கெடுதியை யாம் முன்னரே ஓர் ஓர் எடுத்துக் காட்டுடன் விளக்கிக் காட்டினோம்.