❖ மறைமலையம் 1 ❖ |
அரசியலில் (சுதந்திரப் போராட்டம்) தலைப்பட்டதை மறைமலை அடிகள் ஆதரித்தாரில்லை; என்னைக் கடிந்தும் பேசினர்; தமிழ்ப் புலவர்களில் என்னைக் கடிந்து பேசுவோர் உலகில் ஒருவர் இருக்கின்றாரெனில் அவர் மறைமலையடிகளேயாவர். அடிகள் திருஞானசம்பந்தரைத் தமது ஆருயிராகக் கொண்டவர்; அவர் தமிழில் மூழ்கியவர்... மறைமலையடிகளிடத்தில் பல நல்லியல்புகள் உண்டு. அவைகளில் சிறந்த ஒன்று இரக்கம் சீவகாருண்யம்...
“மறைமலையடிகளார் மாட்சி” என்ற நூலுக்கு
திரு.வி.க அணிந்துரை 3.4. 1949
“....மறைமலையடிகள் மாட்சி எது? அது ஒரு கடல். அதில் ஒரு குடம் இந்நூலாசிரியரால் முகக்கப் பெற்றது... அடிகள் உறவு எனக்கு இளமையிலேயே கிடைத்தது அவ்வுறவு, சங்க நூல்களை ஆராய்ச்சிக் கண்கொண்டு நோக்குமாறும், சிந்தாந்த நூல்களை அறிவியற் கண்கொண்டு நோக்குமாறும் என்னை உந்தியது. இளமையில் என் அறிவு விளக்கத்துக்கு ஒளிகான்றவர் சிலர் அவருள் ஒருவர் மறைமலை அடிகள்.
மறைமலை ஒரு பெரும் அறிவுச் சுடர்; தமிழ் நிலவு. சைவவான். தமிழே சிவமாகவும், சிவமாகவும், சிவமே தமிழாகவும் அடிகளுக்குத் தோன்றுகின்றன என்று யான் கருதுகின்றேன். இரண்டையும் ஒன்றாகக் கண்டவர் திருஞானசம்பந்தர். திருஞானசம்பந்தரிடத்தில் மறைமலை அடிகள் கொண்ட காதற்கு ஓர் அளவில்லை.
தென்னாடு பன்னெடுங்காலம் தன்னை மறந்து உறங்கியது. அவ்வுறக்கம் போக்கிய பெருமை மறைமலை அடிகளுக்குண்டு. அவர் தம் தமிழ்ப்புலமையும், வடமொழிப் புலமையும், ஆங்கிலப் புலமையும், ஆராய்ச்சியும், பேச்சும், எழுத்தும், தொண்டும் தென்னாட்டை விழிக்கச் செய்தன. தென்னாடு அடிகளால் விழிப்புற்றது என்று மண்ணும் முழங்கும்; மரமும் முழங்கும்.