பக்கம்:மறைமலையம் 1.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ தலைவர்கள் பார்வையில் ⁠மறைமலையடிகள் ❖
263

இனத்தாரோடு தமிழரும் சேர்க்கப்பட்டுவிடுவர்; எனவே, தமிழர்கள் தங்கள் மொழியையும் பண்பையும் மறந்து விடக்கூடாது என்பதற்காக மறைமலையடிகளார் தனித்தமிழ் இயக்கம் என்ற பெயரால் சீரியதோர் முயற்சியை மேற்கொண்டார்கள்.

இந்த இயக்கத்தை அவர் தோற்றுவித்தபோது, ‘இது வெற்றிபெறுமா’ என்று சிலரும், ‘இது வேண்டப்படுவதுதானா’ என்று வேறு சிலரும், ‘இதனால் தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் என்ன பயன்’ என மற்றும் சிலரும் வினவத் தொடங்கினார்கள்.

ஆனால், இன்று யார் நடத்துகின்ற ஏடானாலும் தனித்தமிழ் இயக்கத்தை எதிர்த்தவர்கள் ஏடானாலும் அதில் தனித்தமிழ் நடை கையாளப்படுவதை நாம் காணுகிறோம்.

இன்று நாட்டில் ‘படிப்பது வேண்டப்படுவதுதானா’ என்ற ஒரு வியப்பிற்குரிய வினாவும் எழுப்பப்படுவதைக் கேட்கிறோம்.

“கல்லின் ஒலியிலிருந்தும் கருத்தைப் பெறலாம்; ஓடும் ஆற்றிலிருந்தும் கருத்தைப் பெறலாம்” - என்று செகப்பிரியர் கூறியதைப் போல, ‘பெரியவர்கள் சொல்வதைக் கேட்பதாலும் அறிவு பெற முடியாதா’ என்று கேட்கப்படுகிறது. இத்தகை யோருக்கு ஆயிரம் செகப்பிரியர்களின் அறிவுக் கதிர்களும் பயன்படமாட்டா.

இந்த வினாவையும் தாண்டிப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மெல்ல அரும்பியிருப்பதைக் காண்கிறோம். ஆனால், அதே நேரத்தில் தமிழர்கள் செய்ய வேண்டியன இரண்டு உண்டு. ஒன்று படித்த சிலவற்றை மறக்க வேண்டும்; படிக்க மறந்துவிட்ட பலவற்றைப் படிக்க வேண்டும். இவை தாம் தமிழர்கள் ஒரே நேரத்தில் செய்ய வேண்டிய இரண்டு செயல்கள்.

எதையோ ஒன்றைப் புகுத்த வேண்டும் என்ற நோக்கமுடைய நூல்கள் இருக்கின்றன. எதையோ ஆய்ந்து பார்க்கத் தூண்டும் நூல்கள் இருக்கின்றன.

இதை உணர்ந்த மறைமலையடிகள் தமிழர்களுக்கு அவர்களது தனி நாகரிகம் எது? அவர்கள் வணங்கத் தக்கன எவை? அவர்கள் மொழியின் மாண்புகள் என்னென்ன?

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/296&oldid=1597818" இலிருந்து மீள்விக்கப்பட்டது