❖ மறைமலையம் 1 ❖ |
என்பனவற்றையெல்லாம் ஆராய்ந்து, மக்கள் மன்றத்தில் எடுத்துச் சொன்னார்கள். அவர்தம் கருத்துக்களை அறிகிற வர்கள் படிக்கத்தக்க நூல்கள் எவை என்பவற்றை அறிந்து கொள்ள முடியும்; ஆராயத்தூண்டும் நூல்கள் எவை என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
இப்படிச் சொல்லும்போது, ‘அண்ணாதுரை! மறைமலையடிகளார் சமயத் துறையில் - சைவத்தில் நம்பிக்கை வைத்திருந் தாரே, உனக்கு அது இசைவா’ என்று சிலர் வினவக்கூடும். அன்பும் அருளுமே சைவம் என்று மறைமலையடிகளார் கூறியதுதான் சைவம் என்றால் நான் மிகச் சிறந்த சைவன். ஆண்டவன் ஒருவனே என்பதுதான் சைவம் என்றால் நான் மிகச் சிறந்த சைவன்.
இன்று உலகத்தில் நெறியை மட்டுமன்று எல்லாவற்றையுமே ‘இது எனக்கு என்ன பயன்தரும்’ என்ற நோக்கில் தான் உலகம் காணமுற்பட்டிருக்கிறது. இதை ஆங்கிலத்தில் (பயனீட்டுக் கோட்பாடு) (Utilitarian Philosophy) என்று கூறுவார்கள்.
மனிதனுக்கு இருக்கிற காலம் மிகக் குறைவானது. இந்தக் குறைந்த காலத்திற்குள் இதைத்தான் செய்ய வேண்டும், அதை இப்படிச் செய்ய வேண்டும் என்பதை எளியவர்களுக்கும் விளங்கக்கூடிய வகையிலும், பயன்படக்கூடிய வகையிலும் எடுத்துரைக்க வேண்டும்.
கோட்பாட்டு நூல்களிலிருந்து கறக்க வேண்டிய முறைப்படி கருத்துக் கறந்து, கழனிகளில் பணிபுரியும் உழவர்க்கும், ஆலைகளில் அவதியுறும் தொழிலாளர்க்கும், அவாவுக்கும் அச்சத்திற்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிக்கும் மக்களுக்கும் பயன்படத்தக்க புரியத்தக்க வகையில் தரவேண்டியுள்ளது. ஆவினிடத்தில் பாலிருக்கிறது என்றால், அதன் உடல் முழுதும் பாலைத் தேடிச் செல்வதில்லை. கறக்க வேண்டிய இடத்தில் முறைப்படி கறந்தால்தான் பால் கிடைக்கும். அதனால் பயன் கிடைக்கும். அதைப்போல, தமிழ் இலக்கியங்கள், கோட்பாட்டு நூல்களிலிருந்தெல்லாம் கருத்துக்களை முறைப்படி கறந்து தரவேண்டியது தமிழ்ப் புலவர்களின் வேலையாகும்.
ல்