பக்கம்:மறைமலையம் 1.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ தலைவர்கள் பார்வையில் ⁠மறைமலையடிகள் ❖
265



இப்படிப் பயன்படத்தக்க வகையில் எல்லாவற்றையுமே நோக்கிப் பயன் கொண்டவர்கள் மேலை நாட்டவர். 18, 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே அவர்கள், பயன்கொள்ளும் நோக்கத்தோடு செயலாற்றத் தொடங்கிவிட்டனர். நாம் இன்னும் அந்தப் பயன்கொள்ளும் நோக்கத்தைப் பெறவில்லை.

தேங்காயை நாம் பயன்படுத்துவதற்கும்; மாங்காயைப் பயன்படுத்துவதற்கும் வேறுபாடு இல்லையா? தேங்காயில் மேலே உள்ள நாரையும் ஓட்டையும் நீக்கிவிட்டு, உள்ளே உள்ள பண்டத்தைத் தின்கிறோம். மாங்காயில் மேலே பழம் - உள்ளே கொட்டை; பழத்தைத் தின்றுவிட்டுக் கொட்டையை வீசி எறிந்துவிடுகிறோம். அதைப்போல தமிழ் இலக்கியங்களிலும் எதை எதை, எந்த எந்தச் செயல்களுக்குப் பயன்படுத்துவது; எப்படிப் பயன்படுத்துவது என்று முறைப்படுத்தி, வரிசைப்படுத்தி,வகைப்படுத்தித் தர வேண்டாமா? அப்படித் தந்தாலன்றி, மக்களிடையே பொது அறிவு வளருவது எவ்வாறு? எவை, எளிதாக நல்ல பயன்தரத்தக்கன என்று கருதுகின்றார்களோ, அவற்றை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

பயன்தரத்தக்க நோக்கு வேண்டும் என்பதனால்தான், நாங்கள் சில இலக்கியங்களைத் தாக்க வேண்டியவர்களானோம்; சிலர், அவற்றைத் தாங்கித் தீரவேண்டும் என்று கருதினார்கள். இப்படி எங்கள் தாக்குதலுக்கும், சிலரின் தாங்கித் தீரவேண்டிய நிலைக்கும் இடைப்பட்ட நூல்கள் இருக்கின்றனவே, அவைதான் தமிழருக்குப் பயன்தரும் நூல்கள் என்று கூறலாம்.

தமிழனின் தனிப்பண்பு, தனிச்சிறப்புப் பெற்றது. மறைமலையடிகள் காரண காரியங்களோடு விளக்கியிருக்கிறார். கருத்துக்களைப் பதப்படுத்திப் பக்குவப்படுத்தி ஏடுகள் வாயிலாகத் தந்திருக்கிறார். அக்கருத்துக்கள் தமிழர் பயன் பெறுவதற்குப் பயன்படும் என்பதில் ஐயமில்லை.

தமிழ்ப் பெருங்குடி மக்கள், கிடைத்த கருத்துக்களை - பெற்ற கருவூலங்களை எல்லாம் ஒரே பாண்டத்தில் போட்டு வைத்துவிட்டனர். இன்றுள்ள தமிழ்ப் புலவர்கள் அவற்றையெல்லாம் எடுத்து நல்ல கருத்துக்களையும், ஆராய்ச்சிக்கு நிற்கக் கூடியவற்றையும், வெறுங் கற்பனையை மட்டுமே கொண்ட-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/300&oldid=1597823" இலிருந்து மீள்விக்கப்பட்டது