270
மறத்தமிழ் மாண்பினர் மறைமலையடிகளார்
தென்றல் தமிழிருக்க வடமொழி கலந்த வாடைக் காற்றில் தமிழ் மக்கள் போலி இன்பம் கண்டு தங்களையே ஏமாற்றிக்கொண்டிருந்த நாட்களில், ஒளிவீசும் சுடராய்த் தோன்றி உண்மையை நிலைநாட்டியவர் மறைமலையடிகள். முத்தமிழின் அவையில் முழுவதுமாய் ஈடுபட்ட அவர், தாம் பெற்ற இன்பத்தைப் பிற தமிழரும் பெற்று மகிழ வேண்டும் என்பதற்காக எழுத்தால், பேச்சால் இன்றமிழுக்குத் தொண்டு செய்யத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். “வடமொழியின் வழியதாயிற்று” தமிழ் எனத் தமிழ்ப் பகைவர் சொன்ன நேரத்தில், ஆராய்ச்சியில் புடம்போட்ட கேள்விக்கணைகளை அவர்பால் தொடுத்து, அவர் தமைத் தலை குனியச் செய்து தமிழின் ஏற்றத்தை நிலைநாட்டி, தமிழ் தனித்தியங்கும் சால்புடைய தனிச்செம்மொழி” என்பதை மாற்றாரும் ஏற்றுக்கொள்ளும்படி செய்த மாவீரர் அவர். தமிழ் மறுமலர்ச்சியின் வரலாறு அவரது வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. ‘தமக்கென வாழாது தமிழுக்கென வாழ்ந்த’ தமிழ் மாமலை அவர்.
“உரைநடை கைவந்த வல்லாளர்’ எனப் பரிதிமாற் கலைஞரால் போற்றப்பட்ட மறைமலையடிகள் ஐம்பதுக்கு மேற்பட்ட நூல்களை அழகுத் தமிழில் தீட்டித் தமிழ் உள்ளங் களைக் கொள்ளை கொண்டார்.அவரது எழுத்தில் மட்டும் தேன் சொட்டவில்லை. அவரது பேச்சு பலாச்சுளையாய்ப் பைந்தமிழர்க்கு இனித்தது. வெண்பொற்காசுகளை அள்ளிக் கொடுத்து அவர் பேச்சைக் கேட்கப் பெருங்கூட்டமாய்க் குழுமினர்.