❖ தலைவர்கள் பார்வையில் மறைமலையடிகள் ❖ |
பிற மொழிச் சொற்களை நீக்கிய தூய தமிழில் எழுதுவதைக் கொள்கையாகக் கொண்டார் மறைமலையடிகள். தனித் தமிழ் இயக்கத்தின் காவலராக மார்தட்டிக்கொள்வதில் அவர் மகிழ்ச்சி மிகக் கொண்டார். யாருக்காகவும் எதற்காகவும் தமது கொள்கையினை விட்டுக்கொடுக்க அவர் இணங்கவில்லை. இன்று எண்ணற்ற இளைஞர்கள் தனித்தமிழில் எழுதி ஆர்வத்துடன் மொழியை வளப்படுத்துவதற்கு ஆணிவேராக அமைந்தது, அன்று அவர் வகுத்துப் பின்பற்றிய நெறி. “வடசொற்களும், ஏனை அயன் மொழிச் சொற்களும் தமிழிற் கலப்பதால் மொழியின் இனிமை குறைவதுடன் தமிழ்ச் சொற்கள் பலவும் நாளடைவில் மறைய, அயன்மொழிச் சொற்கள் ஏராளமாகத் தமிழில் நிலைபெற்றுவிடுகின்றன. இவ்வாறே நிகழ்ந்துகொண்டிருந்தால் தமிழ் மொழியும் இறந்துபோன மொழியில் ஒன்றாய் விடுமன்றோ” என்று அவரே நெஞ்சம் பதைத்துக் கூறியிருக்கிறார்.
இந்திக்கு இல்லாத சிறப்புத் தருவதை எதிர்த்துக் குரல் கொடுக்க அவர் தயங்கினார் அல்லர். பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சியில் இந்திக்குத் தமிழகத்தில் இடமில்லை என்பதை நாம் திட்டவட்டமாக மைய அரசுக்கு அறிவுறுத்தியிருக்கிறோம். இந்திக்கு எதிராகத் தமிழகத்தில் மூண்ட மாபெரும் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் வாகை சூடிய வீரர்களாக நாம் இருக்கிறோம். இந்தப் போராட்டத்தின் தொடக்க நிலையில் போர்முழக்கம் செய்த தலைவர்களில் மறைமலையடிகள் முன்னணியில் நின்றார். “இந்தி பொது மொழியா” என்ற அவரது நூல் இந்தி வெறியர்களின் ஆணவத்தைத் தவிடுபொடியாக்கிற்று. இந்தி ஒரே மொழியன்று; பற்பல பிரிவுகளைக் கொண்டது. ஒரு சாரார் பேசுவது இன்னொரு சாராருக்கு விளங்காது. இந்நிலையில் அது இந்தியா முழுவதற்கும் பொது மொழியாவது எப்படி? என்று அவர் இடித்துக் கேட்டார். இந்தி மொழியானது வடநாட்டவர் எல்லோராலும் பொது மொழியாகப் பேசப்படுகின்றது என்பது உண்மையாகாது. ஏனென்றால், அது வடக்கே பற்பல மாறுதல்களோடு பேசப்படுகின்றதேயன்றி ஒரே வகையாகப் பேசப்படவில்லை. அங்கே ஒரு நாட்டவர் பேசும் இந்தியை அதற்கு அடுத்த