❖ மறைமலையம் 1 ❖ |
நாட்டிலுள்ளார் தெரிந்துகொள்ள மாட்டாதவராய் இருக்கின்றனர்” என ஆராய்ச்சியின் துணையோடு தெளிவாக விளக்கினார் அவர்.
மொழிப்பற்றோடும் நாட்டுப் பற்றோடும் மட்டும் நின்றுவிடாமல், மன்பதைப் பற்றுக்கொண்டு மக்களின் வாழ்க்கையில் சீர்திருத்தத்தை வலியுறுத்திப் பேசியும் எழுதியும் வந்தவர் மறைமலையடிகள். அதற்காகவும் நாம் அவரைப் போற்றக் கடமைப்பட்டிருக்கிறோம். “சாதி வேற்றுமையும் போலிச் சைவரும்” என்ற அவரது நூல் சாதி என்ற பெயர் தமிழில் இல்லாததையும் பண்டைத் தமிழ் மக்கள் சாதி வேறுபாடின்றி வாழ்ந்ததையும் எடுத்துக் காட்டி ஒற்றுமையை வலியுறுத்துகின்றது.
மறத்தமிழர் மறைமலையடிகள் தென்னாட்டின் சிந்தனைக் கருவூலம், அவரது எழுத்தும் பேச்சும் தமிழ் மக்களைத் தட்டியெழுப்பின. இந்த உண்மையை நேரில் கண்டு உணர்ந்த திரு.வி.க. அவர்கள் “தென்னாடு பன்னெடுங்காலம் தன்னை மறந்து உறங்கியது. அவ்வுறக்கம் போக்கியபெருமை மறைமலை யடிகட்கு உண்டு. அவர் தம் தமிழ் புலமையும், வடமொழி புலமையும், ஆங்கிலப் புலமையும், ஆராய்ச்சியும், பேச்சும், எழுத்தும், தொண்டும் தென்னாட்டை விழிக்கச் செய்தன. தென்னாடு அடிகளால் விழிப்புற்றது என்று மண்ணும் முழங்கும்; மரமும் முழங்கும்” என்று போற்றியுள்ளார். நன்றி மறவாதத் தமிழர் தம் நெஞ்சத்தில் எதிரொலிக்கும் எண்ணமும் இதுவே.
– மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி,
தமிழக முன்னாள் முதலமைச்சர் மறைமலை அடிகள் நினைவு மலர்.
நாகைத் தமிழ்ச் சங்கம்