பக்கம்:மறைமலையம் 1.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
274

❖ மறைமலையம் 1 ❖

இன்முகங்காட்டி, நல்லுரை கூறி வரவேற்றனர். அறுசுவை அமுதூட்டி விருந்தோம்பி மகிழ்ந்தனர்.

அது போழ்து, சிறந்த அத்துறவியார் சின்னம்மையாரின் மனக்கவலையை அறிந்தார்.

‘தொண்டை நாட்டில்’ பாடல் பெற்ற சிவத்திருவிடங்களுள் திருக்கழுக்குன்றம் என்பதொன்று சிறந்து திகழ்கின்றது. நீவிர் இருவரும் சென்று, சில காலம் தங்கி நோன்புகள் புரிந்து காலை மாலை இருவேளைகளிலும், முறைப்படி மலைவலம் வந்து இறைவனை (வேதாசலப் பெருமானை) வழிபாடு செய்யுங்கள். அப்பெருமானின் அருளால், ‘பிள்ளையினோடு உள்ளம் நினைவு ஆயினவே வரம் பெறுவீர். ஐயுறல் வேண்டா; உங்கள் இருவருக்கும் விரைவில் ஓர் ஆண் மகப்பேறு வாய்க்கும்’ என்று அருளிச் செய்து போயினார்.

அவ் அருட்பெருஞ் சான்றோர் அறிவுறுத்தியருளியபடியே, சொக்கநாத பிள்ளையும் சின்னம்மையாரும் திருக்கழுக்குன்றம் போந்து ஒரு மண்டல காலம் (40 நாட்கள்) தங்கி அன்புடன் வழிபட்டனர். இறைவனின் இன்னருளால் சின்னம்மையாரின் மணி வயிற்றில் கரு வாய்த்தது.

செந்தமிழும் சிவநெறியும் செய்த தவப்பயன்போல, “அசைவில் செழுந்தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறை வெல்ல”, திருஞானசம்பந்தப் பெருமானையும் மெய்கண்ட தேவரையும் நினைப்பிக்கும் வகையில், தனித்தமிழ் இயக்கத்தின் தந்தையும் சைவ சித்தாந்தக் கோட்பாட்டுப் பெருஞ்சான்றோரும் மும்மொழிப் புலமைச் செம்மலாரும் - பல்கலைக் குரிசிலும் ஆகப் பிற்றை நாளில் சிறந்தினிது திகழ்ந்து பிறங்க இருக்கும் அழகியதோர் ஆண் குழந்தை ஒன்றைச் சின்னம்மையார் திருவள்ளுவர் ஆண்டு 1907 ஆடித் திங்கள் முதல்நாள் (15-7-1876) இல் பெற்றெடுத்தார்.

திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதாசலப் பெருமானின் அருளாற் பிறந்த தமது ஆருயிர்க் குழந்தைக்கு வேதாசலம் எனவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/307&oldid=1584184" இலிருந்து மீள்விக்கப்பட்டது