❖ தலைவர்கள் பார்வையில் மறைமலையடிகள் ❖ |
பெற்றோர்கள் பெயரிட்டு வழங்கி மகிழ்ந்தனர்.வேதாசலம் எனும் இப் பெயரே, பின்னாளில் துறவறம் பூண்டபொழுது ‘சுவாமி வேதாசலம்’ எனவும், தனித்தமிழ் இயக்கம் தோற்றி நடத்தும் சால்பும் குறிக்கோளும் நேர்ந்த பொழுது ‘மறைமலை அடிகள்’ எனவும் வழங்குவதாயிற்று.
மறைமலையடிகள், தமது இளமைப் பருவத்தில் நாகப்பட்டினத்தில் செவ்விதின் நடைபெற்று வந்த வெசுலியன் கிறித்தவ உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து பயின்று வந்தார். பள்ளியில் அளிக்கப் பெற்று வந்த கல்வியின் அளவு இவர் எல்லையற்ற அறிவு வேட்கையைத் தணிப்பதாக இல்லை. அதனால் அடிகளார் இடைவிடாது பலநூல்களைத் தாமாகவும், தக்கார் சிலரிடத்தும் பயின்றுவர முற்பட்டார்.
நாகப்பட்டினத்தில் அந்நாளில் திரு.வே. நாராயணசாமி பிள்ளை என்னும் நல்லறிஞர் ஒருவர் இருந்தார். அவர் புலவரேறு மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் மாணவர்; மனோன் மணியம் பெ. சுந்தரம் பிள்ளை அவர்களுக்கு ஆசிரியராய்த் தமிழ் கற்பித்தவர். புத்தகக்கடை வாணிகம் புரிந்து வந்த அவ் வித்தகரை அடுத்து, நமது அடிகளார் தமிழ் நூல்கள் பலவற்றைப் பாடம்கேட்டுப் பயின்று பயன் பெறலானார். பதினைந்தாம் அகவையில் முறைப்படி துவங்கப்பெற்ற தமிழ்ப் பயிற்சியானது அடிகளார்க்கு அவர்தம் 21ஆம் அகவையில் பெரும்பாலும் நிறைவுற்றது. குறிப்பிடத்தக்க பழந்தமிழ் நூல்களிற்பெரிதும் அழுந்தி நின்று, செழும்புலமை சிறந்த இனிய விழுமிய செந்தமிழ் நடையில் உரையும் செய்யுளும் பொருள்பொதுள இயற்றும் திறம் அடிகளார்க்கு மிக இளமைப் பருவத்திலேயே வாய்ப்பதாயிற்று. அதுபோல நாகையில் வாழ்ந்த சைவத்திறன் வல்லார் சொ. வீரப்பச் செட்டியார்பால் சைவ சமயக் கோட்பாட்டடிப் படைகளை உணர்ந்தார்.
அடிகளார் 16ஆம் அகவையினராக இருந்தபொழுதே தம்மொடு ஒத்த இளைஞர்களுக்குத் தமிழறிவும் சமய உணர்வும் ஊட்டும் நோக்கத்துடன் ‘இந்துமத அபிமான சங்கம்’ என ஒரு