பக்கம்:மறைமலையம் 1.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
276

❖ மறைமலையம் 1 ❖

சங்கத்தினைத் தோற்றுவித்து, மிக்க ஆர்வத்துடன் நடத்திவந்தார். காரைக்காலினின்று வெளிவந்த ‘திராவிட மந்திரி’ நாகப்பட்டினத்தில் நடைபெற்ற ‘நாகை நீலலோசனி’ என்னும் கிழமை இதழ்களுக்குத் தொடர்ந்து பல கட்டுரைகள் அடிகளாரால் எழுதப்பெற்று வந்தன.

அடிகள் தம் பன்னிரண்டாம் அகவையில் தந்தையாரை இழந்தார். ஒரேபிள்ளை யாதலால் அன்னையாரால் அன்பாகவும் கண்டிப்பாகவும் வளர்க்கப்பட்டார். அடிகளார் செந்தாமரையன்ன சிவந்த ஒளிநிற உடம்பும், பொருத்தமான உறுப்பமைப்பும், உடல் வளமும், பீடு நடையும், திருமுகப் பொலிவும், தோற்றத்தின் ஏற்றமும் கண்டாரெல்லாரும் தம்மை மறந்து வியப்பும் மகிழ்வுங் கொள்ளுமாறு விளங்கினார்.

இத்தகு சிறந்த இளைஞராம் அடிகட்குச் சின்னம்மை திருமணம் முடிக்க எண்ணினார். பெண்ணைத் தேர்ந்து கொள்ளும் உரிமையை மகனுக்கே வழங்கினார். குழந்தைப் பருவம் முதல் குறும்பு செய்து கூடி விளையாடிய ஒன்றுவிட்ட மாமன் மகள் சவுந்தரத்தைத் தம் வாழ்க்கைத் துணைவியாக்கிக் கொள்ள அடிகள் உளங் கொண்டார். அடிகளாரது உளப்படியே தி.பி.1924 (கி.பி.1893) இல் திருமணம் மிகச் சிறப்பாக நிகழ்ந்தது. அதுபோது அடிகளாருக்கு அகவை -17.

அடிகள் தம் பதினெட்டாம் அகவையில் பெண் ஒரு மகவுக்குத் தந்தையாயினர். அக்காலை ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணியில் அடிகள் உள்ளம் தோய்ந்திருந்தார். அவ்வுளப் பாங்கோடு தம் மகளுக்குச் சிந்தாமணி எனப்பெயரிட்டு மகிழ்ந்தார். அடுத்தடுத்துச் சில குழந்தைகள் பிறந்திறந்தன. சென்னை வாழ்க்கையின் போது பிறந்த பெண்குழந்தைக்கு நாகப்பட்டினத்திறைவியின் பெயரை நினைவு கூர்ந்து நீலாம்பிகை எனப் பெயரிட்டு உவந்தார் அடிகள். அடிகளாருக்குத் தனித்தமிழ் இயக்க எண்ணம் தோன்றக் காரணமாக இந்நீலாம்பிகையாரே அமைந்தார்கள். நான்கு ஆண் மக்களைப் பெற்ற அடிகளார் சைவ சமயக் குரவர் பால் கொண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/309&oldid=1584186" இலிருந்து மீள்விக்கப்பட்டது