பக்கம்:மறைமலையம் 1.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
278

❖ மறைமலையம் 1 ❖

கொள்கையும் கூற்றும் சிறிதும் பொருத்த மற்றன என எடுத்துக் காட்டி ‘நீலலோசனி' என்னும் இதழில், 'முருகவேள்' என்ற புனை பெயரில் தொடர்ச்சியாகப் பல கட்டுரைகள் எழுதினார்.அதனைக்கண்டு வியந்து மகிழ்ந்த சோமசுந்தர நாயகர், தம்பால் மிக்க அன்பும் பற்றும் தோன்ற அக்கட்டுரைகளை எழுதியவர் யாவர்,என வினவி யறிந்து,அடிகளாரை நேரிற்காண விழைந்தார். நாயகர் விழைந்தபடியே,அவர்கள் சில திங்கள் கழித்து நாகப்பட்டினத்திற்கு வந்தபோது,மதுரை நாயகம் பிள்ளை என்பவர், அடிகளாரை நாயகரிடம்,அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தார். அடிகளாரின் அறிவும் அழகும் அன்பும் பண்பும் கண்டு, நாயகர் பெரிதும் வியந்து மகிழ்ந்தார்.ஒப்புயர்வற்ற ஆசிரியரும் மாணவரும் தம்முள் ஒருங்கு கூடி உயிர்போலப் பிரிவரிய தொடர்பு கொண்டு,உள்ளம் களிதுளும்பினர்.அடிகளார் பால்,சீர்காழிச் சிற்றம் பல நாடிகள் இயற்றிய 'துகளறுபோதம்' என்னும் நூலை அளித்து,'இதற்கு இனியதோர் உரைவரைக’ எனப் பணித்தார்.அவர் பணித்த படியே சின்னாளில் அந்நூற்குத் சொற்சுவை பொருட்சுவை துளும்பவும், சைவக் கோட்பாட்டு நுட்பங்கள் மிளிரவும்,அடிகளார் ஓர் அரிய உரை வகுத்து நாயகருக்கு அனுப்பினார்.அதன் அருமை பெருமைகளை ஆராய்ந்து கண்டு அகமகிழ்ந்த நாயகர்,'இது சிவஞான முனிவரின் சீரிய உரையோடு ஒப்பது ‘என்று பாராட்டி,அதனைத் தம் செலவிலேயே அச்சிட்டு வெளிப்படுத்தினார்.

அம்மட்டோ! ஒரு கால் நாயகர் நாகைக்கு வந்தபோது, அடிகளார்பால் ‘நின்னை விரைவில் சென்னைக்கு வருவிப்போம்.நீ அப்பக்கங்களில் இருந்தாற்றான் நலம் விளையும்’ என அன்புரை கூறிச் சென்றார்.தாம் கூறிச் சென்றவாறே, ஒரு சில நாட்களில் அடிகளாரைச் சென்னைக்கு வருவித்தார். தம்பாற் பயின்றவரும், ஆந்திரநாட்டிற் சித்தூரில் மாவட்ட நடுவராக இருந்தவரும் ஆகிய சே.எம். நல்லசாமிப் பிள்ளைக்கு, அடிகளாரை அறிமுகம் செய்துவைத்தார். அவர், தாம் ஆங்கிலத்திலும் தமிழிலுமாகச் சித்தூரில் தொடங்க இருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/311&oldid=1589718" இலிருந்து மீள்விக்கப்பட்டது