பக்கம்:மறைமலையம் 1.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
280

❖ மறைமலையம் 1 ❖

மும்மணிக் கோவை' என்னும் சிறந்த நூலை அம் முருகன் மீது இயற்றி மகிழ்ந்தார்.

சென்னையில் கிறித்தவக் கல்லூரியில் பணியாற்றத் தொடங்கிய நாள் முதல் அடிகளார்க்குத் தம் ஆசிரியர் நாயகர் அவர்களிடம் மிகவும் நெருங்கிப் பழகி மகிழும் பெருவாய்ப்புக் கிடைத்தது. அடிகளார் நாயகர் அவர்கள்பால் 'சிவஞான போதம்' முதலிய சைவக் கோட்பாட்டுப் பெரு நூல்களைப் பாடங் கேட்டுத் தெளிந்து பயன் பெற்றார். தந்தையும் மைந்தனும் போல, இவ்விருவரும் ஒருவரை ஒருவர் இன்றியமையாதவராக விரும்பிப் பழகி, அறிவுப் பணிகள் பல புரிந்து, சைவமும் தமிழும் பரப்பி வந்தனர். இந் நிலையில் 22-2-1901 இல், சோமசுந்தர நாயகர் அவர்களின் மறைவு நேர்ந்தது. அதனால் அடிகளார் எய்திய துயரத்திற்கு அளவே யில்லை. தமது ஆசிரியரின் மறைவு குறித்து நிகழ்ந்த இறுதிச் சடங்கில்,சென்னைத் தமிழ் பெரும்புலவர்கள் பலரும் கூடியிருந்த பேரவையில் அடிகளார் தாம் இயற்றிய 'சோமசுந்தரக் காஞ்சி' என்னும் கையறு நிலைச் செய்யுள் நூலை, மிகவும் உருக்கமாகப் படித்து விளக்கி அரங்கேற்றினார். அதன் அருமை பெருமைகளை அரசஞ் சண்முகனார் போன்ற புலவர் அனைவரும் வியந்து பாராட்டினர். எனினும், ஒரு சில புலவர்கள், அழுக்காறு காரணமாக அடிகளார் இயற்றிய 'சோம சுந்தரக் காஞ்சி' என்னும் அச்செய்யுள் நூலுக்குப் போலி மறுப்பு ஒன்று எழுதினர். அதற்கு விடைகூறித் தமது நூலின் சிறப்பினை விளக்கிக் காட்டும் முறையில், 'சோமசுந்தரக் காஞ்சி ஆக்கம்’ என்னும் அரும்பெரும் நூலினை அடிகள் இயற்றி வெளியிட்டனர். 'சோமசுந்தர நாயகர் வரலாறு' என்னும் ஒரு நூலையும், அடிகளார் எழுதியுள்ளார்.

திருவாளர்கள் நாவலர் ச.சோமசுந்தர பாரதியார்,தணிகைமணி இராவ்பகதூர் வ.சு. செங்கல்வராய பிள்ளை, திருப்புகழ் மணி டி.எம்.கிருட்டினசாமி ஐயர், மைய அரசின் முன்னாள் அமைச்சர் பி.சுப்பராயன், திவான்பகதூர் ஆர்.வி. கிருட்டின ஐயர், இரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார், பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளை, இந்திய விடுதலை இயக்கச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/313&oldid=1589625" இலிருந்து மீள்விக்கப்பட்டது