❖ தலைவர்கள் பார்வையில் மறைமலையடிகள் ❖ |
விழா'வும் சிறப்புற நிகழ்ந்தது. இதற்கு முன்பே அங்கே தி.பி.1947 கார்த்திகை 27 (12-12-1916) இல் அடிகளாரின் 'திருமுருகன் அச்சுக் கூடம்' அமைக்கப்பெற்று இயங்கி வந்தது.
கல்லூரிப் பணியை விடுத்த பின்னர்,அடிகளார் நூலாராய்வதிலும், நூல் எழுதுவதிலும்,அங்கங்கே சென்று சொற்பொழிவுகள் ஆற்றுதலிலுமே தமது வாழ்க்கையை ஈடுபடுத்திக் கொள்ளலாயினார்.தமிழகத்தில் மட்டுமன்றி, இந்தியா,இலங்கை முழுவதிலும் அடிகளார் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.
1937 ஆம் ஆண்டில் நிகழ்ந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டிற்கு அடிகளார் தலைமைத்தாங்கி ஆற்றிய சொற்பொழிவே ‘இந்தி பொதுமொழியா?' என்னும் அரிய சிறு நூலாக வெளி வந்துள்ளது.
அடிகளார் தனித்தமிழ் இயக்கம்கண்ட தனிப்பெருந் தலைவர். தனித்தமிழிலேயே எழுதவும் பேசவும் இயலுமா? என்று பலர் எள்ளி நகையாடிய நிலையை மாற்றி அதனைத் தமது எழுத்தாலும் பேச்சாலும் வாழ்வாலும் செய்து காட்டி நிறுவியவர் அடிகளார்! தமிழில் இதற்கு முன்பு தெளிவாக ஏற்படாதிருந்த ஒரு பெரும் புதிய திருப்பத்தினை ஏற்படுத்தியவர் அடிகளார்! இஃதொன்றனாலேயே தமிழ் தமிழ் உள்ளளவும் அடிகளாரின் புகழும் செயலும் நிலைபெறும் என்பது உறுதி. இத்துறையில் அடிகளார் காட்டிய தமிழ் வீரம் சாலப்பெரிது; தன்னிகர் அற்றது!
அடிகளார் எழுதிய ‘மாணிக்க வாசகர் வரலாறும் காலமும்' ஓர் அரிய ஆராய்ச்சிக் கருவூலம். 1300 பக்கங்கள் கொண்ட அந்நூல் ஒன்றனைப் படித்தாலே,தமிழ் அறிவும் புலமையும் பெரிதும் வளர்ந்து வளம்பெறும் என்பது திண்ணம்.
இங்ஙனமே,அடிகளாரின் அளப்பரிய வடமொழிப் புலமைக்கு மிகப் பெரிய எடுத்துக்காட்டு என விளங்குவது ‘சாகுந்தல நாடகம்' என்னும் தமிழாக்கம்.