❖ மறைமலையம்-1 ❖ |
துகளறு போதம்
மெய்கண்டார் பரம்பரையில் வந்த சீர்காழிச் சிற்றம்பல நாடிகள் என்பவர் இயற்றிய நூல் இது. இவரைக் காழி பழுதைகட்டி சிற்றம்பல நாடிகள் என்றும் கூறுவர்.
துகள் ஆவது மாசு மலம் குற்றம் எனப்படுவது. மனமாசுகளில் தலைப்பட்டது. ஆணவமலம். அது யான் எனது என்னும் செருக்கு ஆகும். அவ்வாணவம் அகலுதற்குரிய அறிவுத்திறத்தை விளங்க உரைக்கும் மெய்யியல் நூலே துகள் அறு போதமாம்.
சிற்றம்பல நாடிகள் போதக ஆசிரியராகவும், போதக நூலாசிரியராகவும் திருத்தொண்டு செய்த பெருமையர். சைவப்பயிர் வளர்த்த சான்றோர்களுள் ஒருவர். 14ஆம் நூற்றாண்டினர்; சீர்காழி வாழ்வினர்.
காப்புச் செய்யுளுடன் 101 வெண்பாக்களை உடையது இந்நூல். முப்பொருளாம் இறை உயிர் தளை இந்நூல். முப்பொருளாம் இறை உயிர் தளை என்பவற்றை எளிதில் விளக்கும் அரிய நூல்.
சிற்றம்பல நாடிகளின் மாணவர்களுள் ஒருவர் தத்துவப் பிரகாசர். அவர் இயற்றிய நூல் தத்துவப் பிரகாசம், துகளறு போதக் கட்டளை என்பவற்றையும் எழுதினார். சிவஞான போதம் முதலாம் நூல்களைக் கற்றுத் தெளிய வழிகாட்டும் ஒளிவிளக்கனைய நூல்கள் இவை எனலாம். மறைமலையடிகளார் துகளறு போதத்திற்கு உரைகண்டு 1898 இல் பதிப்பித்தார்.
- இரா. இளங்குமரன்