❖ பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் ❖ |
எத்தனைமுறை உண்ணவேண்டும் என்பதையும், பசியின்மைத் துயர் போக்கச் செய்யவேண்டும் செயன் முறைகளையும் விரித்துரைப்பதே ‘பொருந்தும் உணவு’ என்னும் பகுதியாம்.
மாந்தருயிரேயன்றி மற்றை உயிரிகளுக்கும் ஏற்ற உணவு பயிர் உணவே என்பதைத் தெளிந்த சான்றுடன் விளக்குகிறார். குளிர் நாட்டவர்க்கும் பயிர் உணவே பொருந்துவது என்பதை விரிய விளக்குகிறார்.
மாந்தர்க்குப் பயன் செய்வதாய் தானும் நலம் கொண்டதாய் இருக்கும் உயிரிகள், பயிருணவு கொள்ளும் உயிர்களே என்பதைத் தெள்ளிதின் விளக்குகிறார்.
சமண சமயமேயன்றிப் பெளத்தம் கிறித்தவம் இசுலாமியம் முதலாம் சமய நூல்களும் சமயச் சான்றோர்களும் மேற்கொண்டமையை அவ்வந் நூற் சான்று காட்டி நிறுவுகிறார்.
பயிர் உணவின் ஆக்கமும் புலவுணவின் கேடும் என்பவற்றை வெளிப்பட எவரும் தெளிவாய் உணர நடைமுறை விளக்கம் காட்டுகிறார். உணவாகக் கொள்ளலாகாப் புகைவகை, குடி வகை ஆகியவற்றைச் சுட்டிக் காட்டி, அவற்றின் விளைவையும் விளக்குகிறார்.
மண்பானைச் சமையல், கைக்குத்தல் அரிசி முதலியவற்றை அறச் செய்த குறையை உணரச் செய்கிறார்.
தீங்கிலா உணவுகள் இவையெனக் காட்டி நலவாழ்வுக்கும் நல்வாழ்வுக்கும் அடிகள் வழிகாட்டுகிறார்.
அறிவியல் ஆய்வு வழிப்பட்ட இவ்வாய்ப்பு நூலில் வேற்றுச் சொல் ஒன்றுதானும் இல்லாமை அடிகளாரின் தனித்தமிழ் வீறு விளைத்த பயன் கொடையாம்.
இரா.இளங்குமரன்