பக்கம்:மறைமலையம் 1.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15




1. பொருந்தும் உணவு

நிலத்தின்கட் செய்யப்படும் உழவுத்தொழிலாற் பெறப்படும் பல்வகை உணவுப் பொருள்களைப் பற்றி இவ்வியலிற் சிறிது பேசுவாம். உடம்பு நிலைபெறுதற்கும் வளர்தற்கும் உணவு கட்டாயமாய் வேண்டியிருக்கின்றது. மேலும், உடம்பிலுள்ள உயிர்களெல்லாந் தம்முடம்பைப் பாதுகாக்கும் பொருட்டும், அதனால் இன்பத்தை அடையும் பாருட்டும் பலதிறப்பட்ட முயற்சிகள் செய்வனவாய் இருக்கின்றன. இம் முயற்சிகள் செய்யச் செய்ய உடம்பின்கண் உள்ள வலிவு குறைதலால், திரும்பத்திரும்ப அதற்கு வலி வேற்றுதற்பொருட்டு இசைவான உணவை அடிக்கடி உட்கொள்ளவேண்டுவது கட்டாயமாகின்றது. உள்ளே ஓடுஞ் செந்நீரால் உடம்பின் உள்ளும் புறம்பும் உள்ள கருவிகள் உணவு ஊட்டப்பட்டு வளரும் இயல்பினை மேல் இயல்களில் விளக்கி வந்திருக்கின்றேம். உடம்பின்கண் அமைந்த கூறுகளை யெல்லாம் பகுத்துப் பார்க்குங்கால், அவை நரம்பும் நரம்பின் தசையும் மூளையுஞ் சிறுநரம்புகளுங் கொழுப்புங் கொழுப்பின் றொடரும் எலும்புஞ் செந்நீரும் என்னும் வகையில் அடங்குதல் அறியப்படும். இக்கூறுகள் அத்தனையும் மேலுக்குமேல் வலிவேறி வளர்தற்கு வேண்டப்படும் உணவுகள் ஐந்து பகுதியிலே அடங்கும். அவை: முதலுணா1 கொழுப்புணா2 இனிப்புணா3 உப்புணா4 நீருணா5 என்பனவாகும். இவற்றுள் 'முதலுணா' வென்பது நரம்பும் நரம்பின்றசையும் மூளையுஞ் சிறுநரம்புகளும் என்னும் இவற்றை வலிவேற்றி வளர்ப்பதாகும்: கொழுப் புணா'வென்பது கொழுப்புங் கொழுப்பின்றொடருமென்னும் இவற்றை வளர்ப்ப தல்லாமலும் உடம்பிற் சூடு பிறப்பிக்குங் கருவியுமாகும்; 'இனிப்புணா' வென்பதுங் கொழுப்பினை வளர்ப்பதுடன் சூட்டையுந் தோற்றுவிப்பதாகும்; ‘உப்புணா' வென்பது செந்நீரையும் எலும்பினையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/48&oldid=1624638" இலிருந்து மீள்விக்கப்பட்டது