❖ பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் ❖ |
மாம்பழம் பலாப்பழம், தேங்காய் பனை நுங்கு, முருங்கைக் காய், வெண்டைக்காய் கத்திரிக்காய் பாகற்காய் வாழைக் காய் மாங்காய் பலாக்காய், சர்க்கரை கற்கண்டு பனைவட்டு கரும்பு முதலியன.
இப்போது, மேனாட்டு மருத்துவ ஆசிரியர்கள் உணவைப் பற்றிச் செய்த அரிய பரிய ஆராய்ச்சிகளாற், சில முதன்மையான உண்மைகள் புலனாயிருக்கின்றன. அவற்றுள் முதன்மையான தொன்று வருமாறு. நாம் உட்கொள்ளும் உணவுப் பண்டங்களில் உய்வனவு அல்லது உய்வுறை (Vitamins) என்னும் நுண்ணிய மருத்துப் பொருள் கலந்திருக்கின்றது. மேலே குறித்துக் காட்டிய முதலுணா, கொழுப்புணா, இனிப்புணா, உப்புணா, நீருணா என்பன உடம்பினை உரம்பெற வளர்த்து நிலைபெறச் செய்தற்கு இன்றியமை யாதனவே யாயினும் அவை தம்மை மட்டும் ஒருங்கு கூட்டி இளங்கன்றுகளுக்கு ஊட்டிப் பார்த்ததில், அவை வளர்ந்து செழிப்புடன் உயிர் வாழாமை யினையும், அவ் ஐவகை யுணவுக் கூட்டுடன் சிறிது பாலையுங் கலந்து அவற்றிற்குக் கொடுத்துப் பார்த்ததில் அவை செழுமையாக வளர்ந்து உயிர் வாழ்தலையும் மருத்துவ ஆசிரியர்கள் கண்டறிந்தார்கள்; அதனாற், பாலிலே உயிர்களைப் பாதுகாத்து வளர்த்தற்குரிய ஏதோ ஒரு நுண்ணிய மருத்துப் பொருள் இருக்க வேண்டுமென முடிவு செய்தார்கள்.இந்நுண்ணிய மருத்துப் பொருள் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத தொன்றாய்ப் புலப்பட்டமையால், அதற்கு வைட்டமின்' (Vitamin) என்றும் பெயரமைத்தார்கள். இவ்வயல் மொழிச் சொற் பொருளும் ‘உய்வனவு’ ‘உய்வுறை’ என்னுந் தமிழ்ச் சொற்பொருளும் ஒன்றாயிருத்தலால், அதற்கு ஈடாக இத் தமிழ்ச் சொற்களையே இந் நூலின்கண் வழங்குதல் வேண்டும்.
இனி, எல்லா உயிர்களின் உயிர்வாழ்க்கைக்கும், இன்றி யமையாததான இவ்வுய்வனவு பாலில் இருப்பினும், இப்பால் தானும் நாம் பயன்படுத்தும் முறையால் அதனை இழத்தலுங் கூடும். இழவாதிருத்தலுங் கூடும். பாலைக் காற்றோட்ட முள்ள இடத்தில் நெருப்பின்மேல் வைத்து நெடுநேரங் காய்ச்சினால், அப் பாலில் உள்ள ‘உய்வனவு' என்னும் அம் மருத்துப்