பக்கம்:மறைமலையம் 1.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18

❖ மறைமலையம் 1 ❖

பொருள் கெட்டழிந்து போகும். இங்ஙனங் கெட்டுப்போன பாலை மற்றைப் பண்டங்களுடன் கலந்து இளங் கன்றுகளுக்கு ஊட்டி வந்ததில், அப்போதும் அவை வளர்ந்து செழிப்புறாமை காணப்பட்டது. மற்றுக் காற்றோட்டமுள்ள இடத்திற்பாலை நெருப்பின்மேல் வைத்து நெடுநேரங் காய்ச்சாமற், சிறிது நேரமே காய்ச்சி எடுக்க அப்போது அப் பாலிலுள்ள 'உய்வனவு' முழுதும் அழியாமல் அதில் ஒருவகையே அழிந்து போயதுங் கண்டறிந்தார்கள். ஏனென்றால், அவ்வுய்வனவில் ஒருவகை மருத்துப் பொருளேயன்றி, ஐவகை மருத்துப் பொருள்கள் அடங்கியிருத்தலைப் பின்னும் பின்னுஞ் செய்து போந்த ஆராய்ச்சிகளால், அம் மேனாட்டு மருத்துவ ஆசிரியர்கள் நன்கு கண்டறிந்தார்கள். அங்ஙனஞ் சிறிதுநேரங் காய்ச்சிய தனால், உய்வனவில் முதல்வகை மட்டுங் கெட்டுப் போன பாலை இளங்கன்றுகட்கு ஏனைப் பொருள்களுடன் சேர்த்து ஊட்டிப்பார்க்க, அவை நன்கு வளராமையோடு, அவற்றின் கண்களும், நுரையீரலும், மலக்குடலும் நோய்ப்பட்ட மையும் புலனாயிற்று. ஆகவே, பாலிலுள்ள உய்வனவில் முதல்வகை மட்டுங் கெட்டுப் போமாயின், அத்தகைய பாலை உண்பவர்க்கு, விழிகளும், மூச்சுவிடும் நுரையீரலும், மலக்குடலும் நோய்வாய்ப் படுமென்பது நன்கறியப்பட்டது.

இனி,வயிலினின்று புதிதுவந்த நெல்லைக் கையாற் குத்தி உமிபோக்கி எடுத்த அரிசியைத் தண்ணீருடன் கலந்து புறாக்களுக்கு இரையாகக் கொடுக்க,அவை நோய் இன்றிச் செவ்வையாய் இருந்தன. ஆனால் அந் நெல்லை,நெல் அரைக்கும் பொறிக்குப் போக்கி அரைப்பித்துக் கொணர்ந்த அரிசியை நீருடன் கலந்து அவைகளுக்குத் தீனியாக கொடுத்து வந்ததில்,அவை பசி அவிந்து,வயிற்றுக்கடுப்பால் துன்புற்று மெலிந்து இறந்து போயின.இதனால் நெற்பொறியில் அரைப்பித்தெடுத்த அரிசியில் உடம்பைப் பாதுகாத்து வளர்த்தற்குரிய ஒரு மருத்துப் பொருள் இல்லையாகி ஒழிந்துபோனமை அறியப்படுகின்ற தன்றோ? அங்ஙனம் ஒழிந்துபோன மருத்துப் பொருள் தான் உய்வனவில் இரண்டாம் வகை யாகுமென நன்கு கண்டறிந் திருக்கிறார்கள். நெற் பொறியில் அரைப்பித்த அரிசி யினின்றும் விலகிப்போன தவிட்டையெடுத்து, நீர்விட்டுக் குழப்பி,அவ் வெள்ளரிசியுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/51&oldid=1568571" இலிருந்து மீள்விக்கப்பட்டது