❖ மறைமலையம் 1 ❖ |
பாலிலும் பாலேட்டிலும் வெண்ணெயிலுங் கொழுப்புணா நிறைந்திருக்கின்றது. ஆனாலும், பால் கறக்கும் மாடுகளுக்குத் தகுதியான தீனி கொடுக்கப்படுமாயின், அதன் பாலில் முதலாம்வகை உய்வனவும் மிகுதியாயிருக்கும். வளரும் பிள்ளைகளுக்கும், நச்சுயிர்களால் வருந் தொற்று நோய்களை வராமற் றடை செய்தற்கும் இம் முதலாம் வகை உய்வனவு கட்டாயம் வேண்டப்படுவதாகும் அதுவேயுமன்றிப் பாலிலுள்ள கொழுப்புணவு எளிதிற் செரிப்பதுமாகும். இன்னும், பற்கள் எலும்புகளின் வளர்ச்சிக்கு முதன்மையான சுண்ணமும் எரிகந்தகமும் ஒத்த அளவாகப் பாலில் அடங்கியிருக்கின்றன.
மேலும், ஆவின்பாலில் இரண்டாம்வகை உய்வனவும், சிறிது மூன்றாம்வகை உய்வனவுங் கலந்திருக்கின்றன. நம் இந்திய நாட்டவர்கள் ஆவின்பாலைக் காய்ச்சிப் பருகும் வழக்கம் வாய்ந்தவர்களாய் இருத்தலாற், சிறிதாயுள்ள மூன்றாம் உய்வனவும் பாலைவிட்டுப் பறந்து போய் விடுகின்றது. ஆதலாற், காய்ச்சிய பாலை உட்கொள்பவர்கள், பழங்களையுங் கீரை வகைகளையுஞ் சேர்த்து உட்கொள்ளல் வேண்டும்.
இனி, ஆவின்பாலில் நான்காம்வகை உய்வனவு வேண்டுமளவுக்குக் கலந்திராமையால், ஆவின்பால் ஊட்டி வளர்க்கப்படுங் குழந்தைகளைப் பிற்பகலிற் பகலவன் வெளிச்சத்தில் அரைமணிநேரம் அமரச் செய்தல் வேண்டும். அங்ஙனஞ் செய்யாக்கால், அக் குழந்தைகளின் காலெலும்புகள் மெதுவாகி வளையும்; அதனால் அவர்கட்குத் தள்ளாட்டம் உண்டாகும். மேலும், பால்கறக்கும் மாடுகளுக்கும் பச்சிரைகளை மிகுதியாகக் கொடுப்பதோடு, அவற்றை நல்ல காற்றோட்டமுள்ள திறப்பான வெளிகளிலும் புல்மேயச் செய்தல் வேண்டும். இங்ஙனஞ் செய்து வந்தால், அம் மாடுகள் கறக்கும் பாலில் எல்லாவகை உய்வனவும் நன்கமைந் திருக்கும்.
இனி, உய்வனவுகள் இயற்கையாகவே அமைந்துள்ள உணவுப் பண்டங்களும் அவை அங்ஙனம் அமையப் பெறாத உணவுப் பண்டங்களும் வருமாறு: முதலாம்வகை உய்வனவு மிகுதியாயுள்ள பண்டங்கள்: ஆவின்பால், தாய்ப்பால், நாவுக்கிசைந்த கீரைவகைகளான பொன்னாங்காணி, அரைக் கீரை, முளைக்கீரை, முள்ளங்கிக்கீரை, பசலைக்கீரை, தூதுளங்-