பக்கம்:மறைமலையம் 1.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
24

❖ மறைமலையம் 1 ❖

கீரை, பச்சை உருளைக்கிழங்கு, தித்திக்கும் உருளைக்கிழங்குச்சாறு, அன்னதாழம்பழச் சாறு. இது சிறிதாக அமையப்பெற்றவை: ஆவின்பால், ஏடெடுத்தபால், மோர், தயிர், முளைத்த வாற்கோதுமை, முளைத்த சோளம், அவித்த கோசுக்கீரை, வெந்த பூக்கோசு, வெங்காயம், வேவுவித்த உருளைக்கிழங்கு, பிச்சப்பழம், சீமையிலந்தைப் பழம், வாழைப்பழம் முதலியனவாகும்.

மூன்றாம்வகை உய்வனவு சிறிதும் இல்லா உணாப் பொருள்கள்: வெள்ளைமா, சோளம், கேழ்வரகு, கம்பு வாற்கோதுமை, உலர்ந்த பட்டாணி சீமையவரை, துவரம் பருப்பு, கொள்ளு, சர்க்கரை, தேன், புளித்தமாநுரை, எல்லா வகையான எண்ணெய்களும், உலர்ந்த பழங்கள் எல்லா வகையும், உலர்ந்து போன எல்லாவகைக் காய்கறிகளும், எல்லா வகையான கொட்டைகளும், கட்டிப்பால் புட்டில்களில் விற்கும் எல்லா வகையான உணவுகளும் ஆகும்.

கடைசியாக, நாலாம்வகை உய்வனவுகள் இயற்கையிலே அமையப்பெற்ற உணவுப் பண்டங்கள்: ஆவின் பாலும், வெண்ணெயும், நெய்யும் ஆகும். இது தேங்காயெண்ணெயிலுங் கடலை யெண்ணெயிலுஞ் சிறிதாகவே உளது: இவ்விரண்டிற் றவிர, நம் நாட்டவர்களாற் பயன்படுத்தப்படும் மற்றை யெண்ணெய்களில் இது சிறிதும் அமைத்திருக்கவில்லை. இவ்வுய்வனது பகலவனது ஒளியில் மிகுந்திருத்தலால், எள்ளெண்ணெயை வெயிலில் வைத்தெடுத்து உடம்பின்மேற்றேய்த்து முழுகுதலும், உடம்பை வெயில் வெளிச்சம் படக் காட்டுதலும் மிகுந்த நன்மையைத் தருமென்பதனை முன்னரே எடுத்துரைத்தாம். இது கொண்டு வெயில் வெளிச்சம் படாத இருண்ட வீடுகளிற் குடியிருப்பது எத்துணை தீது தரும் என்பது நன்கு விளங்கா நிற்கும்! அதைப்போலவே, சுண்ணமும் எரிகந்தகமுங் கலவாத உணாப் பொருள்களும், வலுவின்றி வளையும் எலும்புகளை உண்டாக்கித் தள்ளாடச் செய்யுமென்றுணர்ந்து கொள்க. ஆகவே, உடம்பின் என்புகள் உரமேறி வளர்தற்கு வெயில் வெளிச்சமுஞ் சுண்ணமும் எரிகந்தகமும் வேண்டுமளவாய்க் கலந்துள்ள உணாப்பொருள்கள் இன்றியமை யாதனவாதல் தெளியப்படும் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/57&oldid=1567836" இலிருந்து மீள்விக்கப்பட்டது